பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உங்கள் பற்களை நீங்கள் கவனிக்காமல் விட்டு விடுகிறபொழுது பற்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை பற்களைப் பாதுகாக்கும் ஈறும் பங்கப்பட்டுப் போகிறது.

அப்படி மேல் உதட்டின் கீழ் உள்ள ஈறானது கரைந்து போவதால் மேல் உதடு அந்தயிடத்திலே இறங்கிப் போகிறது. இறங்கிப்போகப் போக அடி மூக்கிற்கும் உதட்டிற்கும் ஏற்படுகிற இடைவெளி அதிகமாகிப் போகிறது.

இதைப்படித்த பிறகு ஒரு வாலிபனது முகத்தைப் பாருங்கள். வயதான ஒருவரின் முகத்தைப் பாருங்கள். மேல் உதடு - மேடு இறங்கிப் போய் இருப்பது நன்றாகத் தெரியும். அது மட்டுமல்ல. ஈறின் உட்பகுதி இன்னும் இறங்கிப் போவதால் மூக்கின் இருபக்கங்களிலும் உள்ள கன்னங்களில் கோடு போன்ற ஒரு அமைப்பும் உண்டாகிறது. அந்த இருபக்கம் கீற்றுகள்தான் முகத்தின் எழிலுக்கு முக்கியமான எதிரிகளாக அமைந்து விடுகின்றன. அதனால்தான் “ஈறுகெட்டால் எழில் கெட்டுவிடும்” என்ற பழமொழியும். உண்டாகி விட்டது.

பற்களில், குழியோ, கூச்சமோ, நாசமோ எதுவும் ஏற்படாமல் பக்குவமாக பாதுகாக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பல்லுக்கு வருகிற இரத்த ஓட்டத்தைத் தடுத்து விடாதீர்கள். பல்லுக்கு உணர்ச்சி தருகிற நரம்புகளைத் தடுத்துவிடாதீர்கள். எப்போதும் அழகை ஊட்டும் முக அழகை வீணாக்கிவிடாதீர்கள். உங்கள் முக அழகைக் காப்பதில் பற்களும் முக்கிய பங்கு வகிக்கிறது