பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

சாலறிவன் வாணிகத்தான் சாத்தன்மணி மேகலையாம்
நூலதன்பால் இட்டுவைத்த நுண்புலமை வைப்புமுதல்
வற்றாது மேலும் வளஞ்சுரந்து கூடிவர
அற்றைநாள் கண்ட அமுத சுரபியே,
தேவன் திருத்தக்கன் செம்மையுறச் செய்தளித்த
பாவல்ல சிந்தா மணியிற் படரொளியே,
வன்பில் திணிக்காமல் வந்த வடமொழியைத்
தென்பாகக் கற்றுணர்ந்து தேர்ந்த ஒருகம்பன்
நாவிரித்த பாட்டில் நடம்பயின்று வந்தெங்கள்
காவிரித்தாய் வெள்ளம்போற் காணுங் கவிநலமே
பூவேந்திப் பொங்கிப் பொழிகின்ற தேனெடுத்து
நாவேந்தத் தந்தசுவை நன்றன் றெனவுரைக்கப்
பாவேந்துஞ் சொற்சுவையாப் பாடியவெண் பாவேந்தன்
பூவேந்தத் தந்த புகழேந்தி வந்தவளே,
சீர்கெட்டுப் பாடித் திருட்டுக் கவிபாடிப்
பேர்கெட்டுப் போனாலும் பேர்கவிஞன் என்றுரைத்துப்
பாட்டுத் தளையறுத்துப் பாடிவரின் கூத்தனதைக்
கேட்டுத் தலையறுத்தான் என்று கிளந்திடுவர்;
பாட்டுத் திறமறியாப் பாவலரைச் சீறியெழுந்
தோட்டுத் திறலுடையான் ஒட்டக்கூத் தன்பாவால்
வெற்றுக் கவியென்று வெட்டியும் பாடிடுவான்
உற்ற உயர்கவியென் றொட்டியும் பாடிடுவான்
வெட்டியும் ஒட்டியும் வேண்டும் படியுரைத்த
ஒட்டக்கூத் தன்பாட்டில் ஒட்டிவருங் காரிகையே,
பண்டைநாள் தொட்டுப் பகையாக வந்தவற்றைக்
கண்டு கலங்காமற் கண்டாய் களம்பலவும்
சென்றகள மெல்லாம் செயங்கொண்டாய் ஆதலினால்
இன்றும் பரணிபல ஏற்றுவரும் போர்முரசே,
தென்மலையில் தோன்றித் திரிகூட ராசன்றன்
சொன்மிடையும் பாட்டொலியிற் சொக்குகுற வஞ்சியே,