பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66


41. வெறி வேண்டும்


காதல் வெறி வேண்டும் - தமிழ்ச்செல்வி
          காதல் வெறி வேண்டும் - என்றன்
பேதை மனத் திடையே - உன்றன்எழில்
          பேரொளி வீசிடவே - அந்தக்
காதல் ஒளிப் பிழம்பால் - இன்பநிலை
          கண்டு களித்திடுவேன் - இன்பப்
போதை வெறி யினிலே - வான்வெளி
          புக்குப் பறந் திடுவேன்

செல்வத் திரு மகளே- உன்னைநான்
          சேர நினைக் கையிலே - வஞ்சம்
புல்லும் மனத் தவர்தாம் - கூடியொரு
          புன்மை தரு வாரேல் - என்றன்
மல்லல் திரு நெடுந்தோள் - பகையை
          மாற்றிப் புறங்காண - உன்றன்
முல்லை நகை காட்டிப் - போர்வெறி
          மூட்டித்தர வேண்டும்.

போரில் உரம் காட்டி - உன்னைநான்
          போற்றி மலர் சூட்டி - என்றும்
வாரி நலம் பருகி - நல்லின்ப
          வாழ்வு பெற வேண்டும் - அந்த
வாரி யிடை மூழ்கிக் - கண்டநலம்
          வாழ்த்திப் புகழ்ந் துரைத்து - நின்னைப்
பாரில் உயிர்த் துதற்கே - என் நெஞ்சில்
          பாட்டு வெறி வேண்டும்.

[காவியப் பாவை]