பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67



42. தமிழ் – என் காதலி


பாரி மலை யருகில் - நல்ல
          பண்பினர் வா ழிடமாம்
ஊரில் ஒரு பொழிலில் - உனை நான்
          உற்றறி நாள் முதலே
மீறிய கா தலினால் - தமிழே
          மெய்ம்மறந் தே உழல்வேன்
கூரிய நின் விழியால் - எனை நீ
          கொல்வது தான் சரியோ

ஆசை மனத் திரையில் - எண்ணம்
          அத்தனை யுங் கலந்து
பாச முடன் எழுதி - உருவைப்
          பார்த்து மகிழ்ந் திருப்பேன்
பேச மன மிலையேல் - உயிரைப்
          பிய்த்தெனைக் கொன் றுவிடு
மோசம் புரி வதென்றால் - என்றன்
          மூச்சை நிறுத் திவிடு

உன்னைப் பெறு வதற்கே - இங்குநான்
          ஓடித் திரி வதெல்லாம்
என்னைப் புறக் கணித்தால் - உயிரை
          எப்படி நான் சுமப்பேன்
உன்னெழிற் கா தலன்றோ - என்னை
          உன்மத் தனாக் குதடி
கன்னற் சுவை மொழியே - என்னைக்
          கட்டி யணைத் திட்டி