பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை


கவியரசர் முடியரசனார் கவிதைகள் தாய்மொழியுணர்ச்சி, தமிழின எழுச்சி, தமிழகத்து வளர்ச்சி, சாதியொழிப்பு, சமூகப்புரட்சி, பகுத்தறிவுட்டல், பொது உடைமை நாட்டல், சமஉரிமை பேணல், மாந்தநேயம் காணல், மக்கள் நலம் நாடல் ஆகியவற்றையே பிரதிபலிக்கும். ஆனால் அவை அனைத்திலும் தமிழுணர்வே தலைதூக்கியிருக்கும், முடியரசனாரின் தமிழ் வாழ்த்துக் கவிதைகளை நோக்குங்கால், கவிஞர் நாத்திகரா? ஆத்திகரா? எனும் வினாக்கீற்று, மனத்துள் தோன்றி மறையும். ஏனெனில், அவர் தமிழை நேசித்த விதம் அப்படி !

கவிஞரின் மறைவின் பொழுது, தினமணி (5-12-98) நாளிதழில் ‘பாடிப் பறந்த பறவை’ எனும் முடியரசனார் பற்றிய கட்டுரையில், “தமிழ் அவரது உயிர். எமக்குத் தெரிந்தவரை தமிழை இத்துணை நேசித்த ஒருவரையாம் இதுவரை கண்டதில்லை” என்று முனைவர்.தமிழண்ணல் குறிப்பிட்டுள்ளதிலிருந்து கவியரசர் முடியரசனாரின் தமிழ்ப் பத்திமையை உணரலாம்.

தமிழைத் தாயாக, தந்தையாக, காதலியாக, மனைவியாக, மகனாக மட்டுமன்றித் தெய்வமாகவும் உருவகப் படுத்திக் கனிந்துருகிக் கவிஞர் பாடிய பாடல்களைத் தொகுத்து இத்தொகுப்பில் தந்துள்ளேன். கவிஞரின் பல்வேறு கவிதை நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை இவை. நூலின் பெயரை, ஒவ்வொரு பாடலின் கீழும் அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டுள்ளேன்.

எத்துணையோ இடர்ப்பாடுகள் இன்னல்கள், வறுமை நிலை - அவரைத் தாக்கிய பொழுதும், எக்கடவுளையும் அவர் வேண்டி யாசிக்கவில்லை.

இடர்பல சூழ்ந்த போதும்
என்னுடல் தளர்ந்த போதும்
மிடியெனைத் தின்ற போதும்
விழியொளி குறைந்த போதும்
கடமையில் தவறேன் அம்மா
கனிந்துனைப் பாடிப் பாடி
இடுபணி புரித லன்றி
இனியெனக் கென்ன வேலை?

என்று தமிழையே பாடிக் கசிந்துருகினார். வணங்கா முடியரசராக வாழ்ந்த அவர்,