பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

உள்ளுறை கடவுளும் உரியவர் நமக்கே
அள்ளுற[1] வணங்குவோர் அயலவர் அல்லர்
இறைவினை புரிவோர் ஏதிலர் அல்லர்
முறைஎது? வழிபடு மொழி எது? புகல்வீர்!
முன்னோர் நெறியினில் முரண்பா டென்றீர்!
முன்னோர் யாரென முடிந்த முடிபாச்
சொன்னோர் யாரே? முன்னோர் அவரினும்
முற்பட வாழ்ந்தவர் எப்பெய ருடையார்?
அப்பெரு முன்னோர் ஆண்டவன் மாட்டுச்
செப்பிய மொழி எது? செந்தமி ழன்றோ ?
திருவாய் மொழியெனத் திருவா சகமென
இறைவா! இறைவா! என்றவர் ஒதிய
திருவாய் மொழி எது? தீந்தமி ழன்றோ ?
அவரெலாம் முன்னோ ரல்லரோ? இறைவன்
செவிதனில் அம்மொழி சேர்ந்ததும் இலையோ?
அரவணி இறைவனை ஆரூர் நம்பி[2]
இரவிடைப் பரவை[3]பால் ஏவிய தெம்மொழி?
இடங்க[4] ருண்ட இளஞ்சிறு மகனை
உடம்பொடும் உயிரொடும் உய்வித்த தெம்மொழி?


  1. அள்ளுற - வாயுற
  2. ஆரூர் நம்பி - சுந்தரர்
  3. பரவை - பரவைநாச்சியார்
  4. இடங்கர் - முதலை