பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொடுகழல் மாறன்[1] வடிவொடு வந்ததூஉம்,
மடவரல்[2] மனையாள் மலைமகள் உமையாள்
தடாதகைப் பெயரினைத் தாங்கி வந்ததூஉம்,
மயில்மே லமர்வோன் அயில்வே லுடையோன்
எழில்சூழ் மதுரை எழில்நக ரதனுள்
உக்கிர குமர னுருவொடு வந்ததூஉம்,
தெக்கண மொழியாம் தீந்தமிழ்ச் சுவையைக்
கூட்டுண வெழுந்த வேட்கையால் என்றே
பாட்டினில் குருபரர்[3] பாடி வைத்தனர்;
வடக்கினில் நின்றோன் வரன்முறை யாகக்
கடுக்கவின்[4] கண்டன்[5] தென்றிசை நோக்கி
அடுக்க வந்துவந் தாடுதல் ஏனெனின்
தொடுக்கும் பழந்தமிழ்ச் சுவையினை மாந்தவே.
அறைந்தனர் இவ்வணம் அருட்பரஞ் சோதி[6];
கண்ணுதற் கடவுள் கழக[7]மோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்து பசுந்தமிழ் ஆய்ந்தனன்;
வாத வூரன்[8] ஓதிய வாசகம்
தீதுறா வண்ணம் தென்னா டுடையவன்
ஏட்டில் எழுதி நாட்டிற் களித்தனன்:





  1. மாறன்-பாண்டியன்
  2. மடவரல்-இளமைமிகும்
  3. குருபரர்-குமரகுருபரர்
  4. கடுக்கவின்-நஞ்சின் அழகு
  5. கண்டன்-கழுத்தினன்
  6. பரஞ்சோதி-திருவிளையாடற் புராண ஆசிரியர்
  7. கழகம்-தமிழ்ச்சங்கம்
  8. வாதவூரன்-மாணிக்கவாசகர்.