பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. பொது நூலக வளர்ச்சி

இந்த நிலைமையே பதினெட்டாம் நூற்றாண்டுவரை நீடித்திருந்தது. பெரும்பான்மையான மக்கள் கல்வியறிவற்றவர்களாக இருந்தபோதிலும், நூலகம் நான்கு வகையான முறைகளிலே வளரத் தொடங்கிவிட்டது என்னலாம். கல்வி நூலகங்களின் செல்வாக்கும் பணியும் வர வர அதிகரித்துக்கொண்டே செல்லும்பொழுது, ஒருபால், அறிவியல் நூலகம், வரலாற்று நூலகம் போன்ற தனித் துறை நூலகங்களும், மற்றொருபால், கதை, கட்டுரை, நாடகம் முதலிய எல்லா வகையான நூல்களும் கொண்ட பொது நூலகங்களும் தோன்றலாயின. இந்த மூவகையான நூலகங்களுடன் நான்காவதாகச் சேர்க்கப்பட வேண்டிய நூலகம், நாட்டு நூலகமாகும். அறிஞர்கள், பொது மக்கள் ஆகிய இருதிற மக்களுக்கும் ஏற்ற நூல்களை வழங்குவதோடு, என்றும் பயன்படும் நூல்களைக் காததோம்பலும் இந்த நாட்டு நூலகத்தின் (National Library) பணியாகும்.

இந்த நான்கு வகையான நூலகங்களின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் உதவி புரிந்த மூலங்களையும், அவற்றைக் கொண்ட பல்வேறு வகையான நூலகங்களையும் பிரித்து வகைப்படுத்தி ஆராய்தல் பெரிதும் கடினமாகும். அரசாங்க நூலகம், கல்லூரி நூலகம், பள்ளி நூலகம், பொழுதுபோக்கு மன்ற நூலகம், பல்கலைக் கழக நூலகம், ஆராய்ச்சி நூலகம், மருத்துவ நூலகம், விடுதி