பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

3


வரலாற்றறிவு உதவுகின்றது. இந்த வகையிலே, பெரும் புகழ் பெற்று அந்நாளிலே விளங்கிய மதுரைப் பேரூரின் வரலாற்றை, ஒருவாறு எடுத்துக்கூற முயல்வது இந் நூலாகும்.

2. நான்கு பேரூர்கள்

மாட மதுரை

முன் காலத்தில் நம் நாட்டில் பலப்பல பேரூர்கள் விளங்கின. அவற்றுள், மூவேந்தர்களின் தலைநகரங்களாக மதுரையும், வஞ்சியும், உறையூரும் விளங்கின. பாண்டியரின் கோநகராக மதுரை விளங்கியது. வானுற உயர்ந்த மாடங்கள் விளங்க, வனப்புடன் திகழ்ந்தது அது. அந் நகரினை, ‘மாடமதுரை’ என்றே பலரும் புகழ்ந்து போற்றினார்கள்.

கலிகெழு வஞ்சி

சேரர்களின் பேரூராகத் திகழ்ந்தது வஞ்சி நகரம். அங்கும் மக்கள் வளமுடன் வாழ்ந்தனர்; பற்பல தொழில்களாற்றிச் சிறந்தனர்; வசையின்றி வாழ்ந்து இசைகொண்டு திகழ்ந்தனர். மக்களின் ஆரவார ஒலி, வஞ்சிநகரத்தில் எப்போதும் எழுந்துகொண்டே இருந்தது. அதனால், ‘கலிகெழு வஞ்சி’ என்று சான்றோர் அதனைப் போற்றினார்கள்.

பீடார் உறந்தை

‘சோறுடைத்து சோணாடு’ எனச் சோழ நாட்டினை ஆன்றோர்கள் போற்றுவார்கள். அந்தச் சோழ நாட்டின் தலைநகராக நிலவியது உறையூர். பெருமையினாலே சிறப்புற்றிருந்ததும் அதுவாகும். அதனைப் ‘பீடார் உறந்தை’ எனப் பெரியோர்கள் குறிப்பிடுவார்கள்.

ஒலிபுனல் புகார்

இந்த மூன்று பேரூர்களையும் அல்லாமல், மற்றொரு பேரூரும் புலவர் போற்றும் புகழுடன் அந்நாளிலே திகழ்ந்தது. அது, காவிரியின் கழிமுகத்தே கடற்கரைப் பட்டினமாகவும் அமைந்திருந்தது. அதுவே புகார் நகரம் ஆகும். ஒலிக்கும் கடலினை ஒட்டியிருந்த அந்தப் புகார்ப் பேரூரும், ஒரு காலத்திலே சோழர்களில் ஒரு பகுதியினருடைய கோநகராக விளங்கிற்று. சிலப்பதிகாரத்தின் தலைவன் தலைவியரான