பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

முத்தமிழ் மதுரை


கோவலனும் கண்ணகியும், மாதவியும் பிறந்து வாழ்ந்த பெருமைக்கு உரியதும் அப்புகார் நகரமேயாகும். மாதவியின் மகளும், மாட்சி மிகுந்த சிறப்பினளுமான மணிமேகலை பிறந்து வளர்ந்ததும் அந்தப் புகார் நகரமே.

இவ்வாறு, புகழினாலே சிறந்து, புலவோர் போற்ற விளங்கிய இம்மூதூர்கள் நான்கினையும் உளமாரப் போற்றி உவந்தவர் பலராவர். அவருள், சிலப்பதிகாரத்தின் ஆசிரியரான இளங்கோவடிகள்,

நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நன்னாட்டு
மாட மதுரையும், பீடார் உறந்தையும்,
கலி கெழு வஞ்சியும், ஒலிபுனல் புகாரும்

(சிலம்பு: 8: 1-4)

என்று உரைத்துள்ளனர். “திருமால் வீற்றிருக்கும் குன்றமாகிய வடவேங்கட மலையும், முப்புறத்தும் கடல்களுமாகத் தமிழகத்தின் எல்லைகளை வரையறுத்து ஆன்றோர் உரைத்துள்ளனர். தண்மையான நீர்வளத்தினை யுடைய, நன்மை பொருந்திய அத்தகைய தமிழ்நாட்டின் கண்ணே, மாடங்களையுடைய மதுரையும், பெருமையாற் சிறந்த உறையூரும், ஆரவாரம் நிறைந்த வஞ்சியும், ஒலிபுனலான கடலருகே விளங்கும் புகாரும்” என்பது இவ்வடிகளின் பொருளாகும்.

கொற்கைப் பேரூர்

பாண்டியர்க்கு மதுரை கோநகராக விளங்கினாலும், கொற்கைப் பட்டினம் அவர்களுக்குரிய துறைமுகப் பட்டினமாகச் சிறந்திருந்தது. அது கடல் வாணிகத்தினை வளர்த்துப் பேணும் கவினுறு நகரமாகவும் திகழ்ந்து வந்தது.

தொண்டிப் பட்டினம்

சேரருக்கு வஞ்சியே கோநகராக வளமுடன் திகழ்ந்தது என்றாலும், வளமையினாலே புகழ்பெற்ற 'தொண்டி' என்னும் பேரூர், பெருமைமிகு கடற்கரைப் பட்டினமாக இருந்தது.

புகார்ப் பட்டினம்

சோழர்க்கு உறையூரே கோநகராக உயர்வுடன் அமைந்தது. ஆனாலும், அவருக்குரிய கடல் வாணிகம் பேணிய பட்டினமாகப் புகார் நகரமே பெரிதும் புகழ்பெற்று நிலவியது.