பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

5



இரண்டுபட்ட சோழர்கள்

வஞ்சியையும், தொண்டியையும் இளங்கோவடிகள் கூறவில்லை. புகாரினை மட்டுமே தனியாக எடுத்துப் போற்றுகிறார். இஃது எதனால் என்று நாம் அறிந்து கொள்வோம். அந்நாளிலே சோழர்கள் இரண்டு பிரிவினராக இருந்தனர். ஒரு பகுதியினர் உறையூரைத் தலைநகராகக்கொண்டு சோழநாட்டின் ஒரு பகுதியைக் காத்து வந்தனர். மற்றொரு பகுதியினர் புகாரைக் கோநகராகக் கொண்டு சோணாட்டின் மற்றொரு பகுதியினை ஆண்டு வந்தனர். இதனாலேயே, புகார் நகரத்தினைத் தனியாகச் சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் குறிப்பிட்டுப் போற்றினார்.

சிலப்பதிகாரக் கதையின் தொடக்கம் புகார் நகரிலேதான் எழுதியது. அதனால், சிலப்பதிகாரக் காப்பியத்தின் ஆசிரியரான அவர், புகார்ப் பட்டினத்தை மட்டும் குறித்துப்போற்றினார் என்றும் சிலர் கூறுவார்கள். எங்ஙனமாயினும், சிலம்பினாலே நாம் அறியும் புகழ்பெற்ற பேரூர்கள் நான்கு எனலாம்.

பற்பல பேரூர்கள்

இந்நான்கு பேரூர்களே அல்லாமலும், வேறு பலப்பல பேரூர்களும் தமிழகத்தில் அந்நாளில் சிறப்புற்றிருந்தன. அவற்றுள் ஒரு சிலவற்றைப்பற்றியும் இங்கே சிறிதளவு நாம் அறிந்துகொள்வோம்.

“நன்னன்” என்பவன் ஒரு குறுநில வேந்தன். அவனுடைய கோநகராகச் சிறப்புடன் திகழ்ந்தது பாழிப்பேரூர் ஆகும்.

‘மலையமான்’ எனவும், மலாடர் கோமான் எனவும் புகழுடன் விளங்கியவன் காரிவள்ளல். அவனுக்கு உரியதாகத் திகழ்ந்தது திருக்கோயிலூர்ப் பேரூர் ஆகும்.

‘அதியமான் நெடுமான் அஞ்சி’ என்பவன், தகடூரைத் தலைநகராகக்கொண்டு தறுகண்மையுடனும் வள்ளன்மையுடனும் ஆட்சி நடத்தி வந்தவன். அந்தத் தகடூரும் பெரிய நகராகவே இருந்தது.

தொண்டைமான்களின் பேரூராகத் தொன்மையும் வளமையும் கொண்டு திகழ்ந்தது காஞ்சிப் பேரூர். வையாவிக் கோப்பெரும் பேகனின் வளநகராக விளங்கியது ‘பொதினி’ என்னும் பேரூர். பல்லோர்க்கும் வாரி வழங்கியவன் பாரிவள்ளல்; அவனுடைய பறம்பு மலைப் பேரூரும், ஓரிவள்ளல் என்பவன் வீற்றிருந்து ஒப்பற்ற ஆண்மையுடன் காத்துவந்த