பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

9



நினைவு நாட்கள்

‘தமிழ் முனி நிலவும் பொதியம் உள்ளவரை தமிழ் மதுரையின் புகழும் குறையாது’ என்ற முதற்செய்யுள் ஒரு சிறந்த உண்மையினைக் கூறுகிறது.

சில ஆண்டுகளுக்குமுன், நம் நாடும் உலக நாடுகள் பலவும், மகாகவி தாகூரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடின. நாம் பாரதி விழாவினையும், கம்பன் விழாவினையும், திருவள்ளுவர் விழாவினையும் ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றோம். அவர்களுடன் தொடர்புடைய ஊர்களையும் போற்றுகின்றோம். இவற்றை எல்லாம் எதனாற் செய்கின்றோம்? எதற்காக இவர்களைப் போற்றுகின்றோம்?

தமிழின் முதன்மை

மொழிதான் ஓர் இனத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உரிய உயிர்ப்பாற்றலாக இருக்கிறது. மொழியிலே செப்பம் இல்லையானால், அம் மொழிபேசும் மக்களுடைய வாழ்விலும் செப்பம் அமைவதில்லை. மக்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள உதவுவது மொழிதான். முன்னோரின் அறிவுச் செல்வத்தைப் பெறுவதற்கு உதவுவதும் மொழிதான். பின் வருவோருக்கு நம் கருத்துக்களை அறியச் செய்வதற்கு உதவியாயிருப்பதும் மொழிதான். இவ்வாறு, முக்காலத்தினும் விளங்கும் நிலையான ஆற்றல் மொழிக்கு உண்டு. அதுபற்றியே, மொழி வளர்த்த மூதறிஞரை, உலகம், என்றும் எங்கணும் நன்றி மறவாது போற்றிவருகின்றது.

தமிழ் மொழியின் வளர்ச்சியிலே முதற்பணி செய்தவர் அகத்தியனார். ஜந்திரத்திற்கு அடுத்தபடியாக அகத்தியமே தமிழின் முதல் இலக்கண நூலாகத் திகழ்ந்தது. மொழியின் செப்பத்திற்கும் அதுவே உதவியது. குறுமுனியாகிய அகத்தியனார் வாழ்ந்து தமிழ்வளம் பெருக்கிய இடம் பொதியமாகும். இதனால், பொதியமும் தமிழ் உள்ளவரை நீங்காத பெருமையினை உடையதாக நிலவும். அப்பொதியம் உள்ளவரையும் மதுரையின் புகழும் நிலைபெறும். இச்செய்யுள் இவ்வாறு கூறி நமக்கு உறுதியளிக்கிறது. இது, தமிழ் மொழியை நாம் பேணவேண்டிய பெருங்கடமையினை நன்கு வலியுறுத்துவதுமாகும். ‘தமிழ் உள்ளவரை மதுரையின் புகழ் நிலைபெறும்’ என்றதனால், தமிழ் என்றும் உளதாகுமாறு போற்றவேண்டிய கடமையும், நமக்கு எப்போதும் உளதாகின்றது.