பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

11


அஃதல்லாமல், அவற்றிற்கு என்றும், எவ்வகையானும் குறையே நேராது. கொடியுடைய தேரோன் பாண்டியன். அவனுடைய ஆணை செங்கோன்மை யினின்றும் எள்ளளவும் தவறாதது. அந்த ஆணையானது நிலைபெற்றிருக்கும் வரையும் மதுரையின் புகழும் மங்குவதில்லை.”

கார்த்திகை காதிற் கனநகர குண்டலம்போல்
கீர்த்தி விளங்கித் திருப்பூத்தல் அல்லது
கோத்தையுண் டாமோ மதுரை- கொடித்தேரான்
வார்த்தையுண்டாகும் அளவு?

‘பெண்களின் கற்பும் அரசியலிற் செங்கோன்மையும் உள்ளவரை, மதுரையின் புகழும் நிலவும்” என்பது இதன் கருத்து.

இவ்வாறு, புலவோர் போற்றிப் பாராட்டும் மதுரையின் புகழினையும், அமைதியினையும், மதுரை மக்களின் வாழ்வினையும், மதுரை மன்னர்களின் மாண்பினையும், பிறவற்றையும் அடுத்துவரும் பகுதிகளிலே நாம் காண்போமாக.

4. மதுரை எழுந்த கதை

தென் மதுரை

பாண்டியரின் தலைநகராக ஆதிநாளிலே விளங்கியதும் ‘மதுரை’ என்னும் பெயரினையுடைய பேரூரே யாகும். பின்னுள்ள மதுரை ஏற்பட்டபின், அன்றிருந்த கடலுள் மறைந்த அந்த ஆதி மதுரையினைத் ‘தென்மதுரை’ என்று அறிஞர்கள் குறிப்பிடுவார்கள்.

குமரி முனைக்குத் தெற்கே பரந்து விரிந்து கிடந்த பெருநிலப்பரப்பிலே, பாண்டியரின் பழந்தமிழ்ப் பேரூராக இத்தென்மதுரை திகழ்ந்தது. காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாகப் பாண்டியப் பேரரசர்கள் வழிவழியாக இதன்கண் அரசுவீற்றிருந்தனர். உலகிலேயே, முதன் முதலாக மொழியினை ஆய்ந்து செப்பமிட்டுப் பேணும் முயற்சியின் தோற்றுவாயான முதற்சங்கம் தோன்றி அமைந்திருந்ததும் இத்தென்மதுரையிலேதான்.

கடுங்கோனின் காலத்திலே, கடல் பொங்கி எழுந்தது. பாண்டிய நாட்டின் பெரும்பகுதியினைத் தன்னுள் விழுங்கிக் கொண்டது. தமிழகத்தின் பெருநிலப்பரப்பும்,