பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

13


பாண்டியப் பேரரசை நிறுவினான். இருமுறை கடல்கோளுக்கு இரையாகித் தலைநகரை இழந்ததனால், கடற்கரையைவிட்டு உள்நாட்டின் கண்ணேயே தன் தலைநகரத்தினை அமைத்துக் கொள்ளவும் அவன் எண்ணமிட்டான். முதற்கண், மணவூரிலே தன்னிருப்பிடத்தை அமைத்துக் கொண்டு, தலைநகருக்குத் தக்கவோர் இடத்தினை ஆராய்ந்து கொண்டும் இருந்தான்.

மணவூர் வணிகன்

மணவூரிலே ஒரு வணிகன் இருந்தான். அவன் தன் வாணிகச் சாத்துடன் நாட்டின் பல பகுதிகட்கும் சென்று வாணிகஞ் செய்து வருபவன். ஒரு முறை, வாணிகத்திற்குச் சென்றுவிட்டு அவன் மணவூருக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தான். வழியில், ஓரிடத்திலே பொழுது சாயத் தொடங்கியது. இரவில் தங்கியிருப்பதற்கு ஏற்ற ஓர் இடத்தினை அவன் தேடினான். கடப்ப மரங்கள் செறிந்திருந்த இடமொன்று அவன் கண்ணெதிரே தோன்றிற்று. அவ்விடத்திலே அன்றிரவு தங்கியிருக்கவும் அவன் முடிவுசெய்தான். அங்கே ஒரு பெரிய பொய்கையும், அதன் கரையிலே ஒரு சிவலிங்கமும் இருந்தன. பொய்கையிலே நீராடிவிட்டுச் சிவலிங்கத்தை வணங்கிப் போற்றியவனாக அவன் உள்ளம் மகிழ்ந்தான். அங்கேயே இரவு தங்கியும் இருந்தான்.

மறுநாள் மணவூரை அடைந்ததும், தான் கண்ட கடம்ப வனத்தைப் பற்றிய செய்தியை, அரசனிடத்தே சென்று அவ்வணிகன் தெரிவித்தான். ‘பொய்கையும், சிவலிங்கமும் அந்த இடத்திலே காணப்பெற்றதனால், அவ்விடத்தே பழங்காலத்திய பேரூர் ஒன்று இருந்திருக்க வேண்டும்’ எனவும், அவன் சொன்னான்.

அரசனும் பெரிதும் உவகையோடு வந்து அந்த இடத்தைப் பார்வையிட்டான். அது தலைநகருக்குத் தகுதியான இடமாகவே அவனுக்கும் தோன்றிற்று. அங்கேயே தன் தலைநகரினை அமைக்கவும் அவன் முடிவு செய்தான்.

மதுரை எழுந்தது

பாண்டியனின் பணியாளர்கள் இரவு பகலாக அங்கே பணி செய்தனர். சிவலிங்கத்தை நாயகமாக்கி ஒரு பெரிய கோயிலை முதலில் எழுப்பினர். அந்தக் கோயிலைச் சுற்றிலும் தெருக்களை அமைத்தனர். தெருக்களின் இருமருங்கும் பல்வகை நிலையினரும் வாழ்வதற்கேற்ற வீடுகளும் மாளிகைகளும்