பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

முத்தமிழ் மதுரை


எழுந்தன. அரசனின் பெருங்கோயில் நகரத்தின் வடகிழக்கு மூலையிலே கவினுடன் அமைக்கப்பெற்றது.

உயரமான மதிற்சுவர்களுடன் கூடிய கோட்டைமதில் ஒன்றும் நகரைச் சூழவும் எழுந்தது. கோட்டை மதிலுக்குப் புறத்தே ஆழமான அகழியினை அமைத்தனர். அகழியை அடுத்தாற்போல் அடர்த்தியான காவற்காடும் உருவாயிற்று.

இங்ஙனமாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளும், வாழ்வதற்குரிய வசதிகளும், இறைவனின் திருக்கோயிலும் எல்லாம் செவ்வையாக அமைந்தன. அதன்பின்னர், பாண்டியனும், மணவூரைவிட்டு வந்து மதுரையைத் தன் இருப்பிடமாக்கிக் கொண்டான்.

இவ்வாறு, மதுரை எழுந்த கதையினைத் திருவிளையாடற் புராணம் கூறுகின்றது.

5. மதுரையின் பெயர்

‘மதுரை’ என்னும் பெயர் இப்பேரூருக்கு எதனால் ஏற்பட்டது? அந்தப் பெயரின் பொருள் யாது? இதனையும் நாம் அறிந்துகொள்ளல் வேண்டும். இந்தப் பகுதியிலே அதனைப்பற்றிக் காண்போம்.

மருதையும் மதுரையும்

வையையாற்றின் நீர்த்துறைகளுள் சிறப்பு உடையது திருமருத நீர்ப்பூந்துறை என்பதாகும். மருதமரத்து நீழலை உடையது அது. இது பெயரினாலேயே விளங்கும். இதனால், அதனையொட்டி ‘மருதை’ என்ற சொல்லும் எழுந்தது. ‘மருதை’ என்ற சொல்லே ஊரின் பெயராக ஒரு காலத்தில் இருந்திருக்கக்கூடும். இந் நாளினும் மக்களுட் பலர் ‘மருதை’ என்றே இதனை வழங்குகின்றனர். மருதநிலத்துப் பேரூர் இது என்னும் சிறப்பினாலும், ‘மருதை’ என வழங்கி இருக்கலாம். பின்னர், அது திரிந்து மதுரையாக ஆகியிருக்கலாம். மருதன் இளநாகனார், மாங்குடி மருதனார் என்னும் பெயர்கள், மருதை என்ற சொல் அன்றும் பெருவழக்காக இருந்ததைக் காட்டும். இவ்வாறு ‘மருதையே காலப்போக்கில் மதுரையாயிற்று’ என்பார்கள் சிலர்.

மதுரையும் இனிமையும்

‘மதுரை’ என்ற சொல் ‘இனிமை’ என்னும் பொருளைத் தருவது, ‘வாழ்வார்க்கு என்றும் இனிது’ என்ற தன்மையினாலே,