பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

15


இவ்வாறு ஊரின் பெயர் அமைந்திருத்தலும் பொருத்தம் உடையதேயாகும்.

“சிவபெருமான் தம் திருமுடியிலுள்ள பிறையின் அமுதமாகிய மதுரத்தை இந்நகரின் கோயில்களிலும் கோயிற் கோபுரங்களிலும் தெளித்தனர்; அதனாலேயே மதுரை என்னும் பெயர்வந்தது” என்று, தலபுராணங்கள் எடுத்துக் கூறுகின்றன.

‘மதுரம்’ என்பதும் இனிமை; தமிழ் என்பதும் இனிமை. தமிழ் வளர்கின்ற வளர்கின்ற நகரம் என்று குறிக்கவே ‘மதுரை’ என்றனர். மது+உரை= மதுரமான பேச்சு; அது தமிழ் என்பார்கள் சிலர்.

“மதுரைக்கு ஒரு தனிச்சிறப்பும் உண்டு. அங்கே கோயில் கொண்டிருக்கும் அப்பனைவிட அம்மைக்கே சீரும் சிறப்பும் மிகுதியாக இருக்கும். அதனால், ‘மாது உறையும் பேரூர்’ என்று முதலில் வழங்கி, அதுவே ‘மதுரைப் பேரூர்’ எனத் திரிந்து, பின்னர் மதுரையாகவும் நிலவுவதாயிற்று” என்றும் சிலர் சொல்வார்கள்.

எனினும், மதுரை என்னும் பெயருடனேயே இப்பேரூர் பழங்காலத்தும் வழங்கிவந்தது என்பதனை நாம் அறியலாம். சங்கத் தமிழ்ப் புலவர்களிற் சிலருடைய பெயர்கள், ‘மதுரை’ என்னும் சொல்லைத் தம்முடன் கொண்டிருப்பதும், சங்கநூற்கள் பலவற்றுள்ளும் ‘மதுரை’ என்றே பலவிடங்களில் வருவதும் இதனை வலியுறுத்தும்.

‘தெற்கே தலைச்சங்கம் இருந்தது. அதுவும் மதுரை என்றே பெயர் கொண்டிருந்தது. பின் இம்மதுரை எழுந்ததும், அதன் நினைவாகவே இதனையும் மதுரை என்றனர். இப்படியும் சிலர் கூறுவார்கள்.

நான்மாடக் கூடல்

நான்கு பெரிய மாடங்களை உடைய திருக்கோயிலைக் கொண்டது மதுரைப் பேரூர். அதனால், இதன் பெயர் ‘நான்மாடக் கூடல்’ எனவும் வழங்கப் பெறுகிறது. ‘கூடல்’ என்ற சொல்லுக்கு ‘ஒன்று சேர்தல்’ என்பது பொருள். “கடல்கோளாற் சிதறுண்ட பாண்டியரின் பல்வளமும் சிறப்புக்களும் மீண்டும் ஒன்றுகூடிய இடமாதலின், ‘கூடல்’ என்ற பெயர் இப் பேரூருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும் எனவும் பெரியோர்கள் உரைப்பார்கள்.

திரு ஆலவாய்

‘திருவாலவாய்’ என்றொரு பெயரும் இப் பேரூருக்கு வழங்கும். சிவபெருமானின் ஆணையினாலே, நாகத்தால்