பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

முத்தமிழ் மதுரை


அளந்து காட்டப்பெற்ற இடத்தே எழுந்த நகரம் இது. திருவிளையாடல் புராணத்திலே காணப்படும் செய்தி இதுவாகும். இதனையொட்டியே ‘ஆலவாய்’ என்ற பெயர் இப்பேரூருக்கு ஏற்பட்டது என்பார்கள்.

கடம்ப வனம்

கடம்ப மரங்கள் ஒரு காலத்தே இங்குச் செறிவுற்றிருந்தன. அதனையொட்டிக் ‘கடம்ப வனம்’ என்ற ஒரு பெயரும் இதற்கு ஏற்படலாயிற்று.

இவ்வாறு, பல பெயர்களாலே விளங்கிய பழம் பெரும் மூதூர், மதுரைப் பேரூர் என்றும் நாம் அறிதல் வேண்டும்.

6. உலகறிந்த பேரூர்

மதுரை நகரம் மிகவும் பழைமையானது. கடைச் சங்க காலத்திலே கவினுறத் திகழ்ந்த பேரூராக இது விளங்கியது. இதன் வளமும் சிறப்பும் கண்டவர் போற்றும் வண்ணம் அக்காலத்தே விளங்கின. இவற்றினோடு, மதுரைப் பேரூரின் காலங்கடந்த பழைமையினை அறிவதற்கு நாம் மற்றுஞ் சிலசெய்திகளையும் இப் பகுதியிற் காண்போம்.

பரசுராமரின் காலத்தில்

பரசுராமரின் காலம், இராமாயண காலத்திற்கும் முற்பட்டது. இவர் பாண்டிய நாட்டுச் செல்லூரிலே ஒரு யாகஞ் செய்ததாகச் சங்கநூற்களிலே ஒரு செய்தியினைக் காணுகின்றோம். ‘மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்’ எனவும், இவர் அகநானூற்றிற் குறிப்பிடப் பெறுகின்றனர்.

இவர் தென்னகம் வந்ததனையும், இவரே மலையாள நாட்டினை வழங்கியவர் என்ற கதையினையும், வேறுபல வழக்குகளும் எடுத்துக் கூறுகின்றன.

மணிமேகலையுள் ஒரு செய்தி கூறப்பெறுகின்றது. “பரசுராமர் அரசகுலத்தினரை வேருடன் அழிக்க விரதம் பூண்டனர். அதனை அறிந்த சோழன் கலங்கினான். தன்னுடைய பரத்தைவழித் தோன்றிய மகனுக்குப் பட்டஞ் சூட்டிவிட்டுத் தான் பொதியமலைக்குத் தவம் புரியச் சென்றுவிட்டான். இது நிகழ்ந்தது காவிரிப்பூம் பட்டினத்திலேயாகும்" என்பது அச்செய்தி. இதனால், அந்நாளிலேயே பாண்டியரின் சிறப்புமிக்க ஆட்சி தென்னகத்திலே நிலவிவந்தது என நாம் அறியலாம்.