பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

19


மெளரியனே பத்திரபாகு முனிவருடன் தெற்கே வந்தவன்; கி.மு. 298-ல் வீடுபெற்றவன்’ என்று, சமண சமய வரலாறுகள் கூறுகின்றன. இதனால், இந்தக் காலத்திலும் மதுரைப் பேரூர் சிறந்திருந்த செய்தியை நாம் அறிந்து கொள்ளலாம்.

மேலும், சங்கநூல்களிலே காணப்பெறுகிற மற்றொரு செய்தியும் இதனை வலியுறுத்துகிறது. ‘வடுகரின் துணையுடன் தென்னாடு வந்த மோரியப் படைகளை, மதுரைப் பாண்டியரின் தளபதிகளுள் ஒருவனான மோகூர்ப்பழையன் மாறன் என்பவன் தோல்வியடையச் செய்தான்’ என்பதே அது.

இதனால், மோரியரின் காலத்திலேயும் மதுரைப்பேரூர் சிறப்புற்றிருந்தது எனலாம். இந்தியாவின் பெரும்பகுதியையும் (இன்றைய மைசூர்ப்பகுதி உட்பட) வெற்றி கொண்டு பேரரசுகண்டவர் மோரியர். அம் மோரியரையும் வெற்றிகொண்ட பெருமை மதுரைப் பாண்டியரிடை நிலவியது என்பதனை இதனால் நாம் தெரிந்துகொள்ளலாம்.

பிராமிக் கல்வெட்டுக்கள்

மதுரைப் பகுதியிலே காணப்படும் பிராமிக் கல்வெட்டுக்கள் ‘கி.மு. மூன்றாம் நூற்றாண்டின்கண் எழுந்தவை’ என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்தக் கல்வெட்டுச் செய்தியும் மதுரையின் பழமைக்குச் சான்று பகர்வதாகும்.

அசோகனின் காலத்தில்

அசோகப் பேரரசனின் காலத்திலும் மதுரைப்பேரூர் புகழுடன் விளங்கியது. இதனைப் பெளத்தர் உவந்த மதுரை என்ற பகுதியிலே காணலாம்.

வட மதுரை

தென்மதுரை தலைச்சங்கத்தின் இருப்பிடமாகத் திகழ்ந்ததனை நாம் அறிவோம். பிற்காலத்துக் கடைச்சங்கம் இருந்த மதுரையும் இதன் பெயரை ஒட்டியே எழுந்தது. ஆனால், இந்த மதுரையின் பெயரை ஒட்டி வடக்கேயும் ஒரு மதுரை எழுந்தது. பாரதக் கதையினாலே இதனை நாம் அறிகின்றோம். அந்த மதுரை கண்ணபிரானின் தாய்மாமனான கம்சனுக்கு உரியதாகும். இதனாலும், இம்மதுரையின் பழைமை நன்கு அறியப்படும். ‘அருச்சுனன் பாண்டியனின் மகளை மணந்தான்’ என்ற செய்தி, இக்கருத்தினை மேலும் அரண் செய்வதாகும்.