பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

முத்தமிழ் மதுரை



கிரேக்கரின் தொடர்பு

பண்டைக் காலத்திய மதுரைக்கும் கிரேக்கர்களுக்கும் தொடர்பு நிலவிற்று. வாணிகத் தொடர்பு மட்டுமல்லாது, அரசியல் தொடர்புகளும் நிலவின. இதனை, முன்னரே மெகஸ்தனிசு என்பவர் எழுதிய குறிப்பினால் ஓரளவுக்கு நாம் அறிந்தோம்.

மேலும், கிரேக்கப் படைவீரர்கள் பலர் தமிழகத்துப் படையணிகளிலே பணியாற்றினார்கள் என இலக்கியங்கள் கூறுகின்றன. அவற்றுள் சிலப்பதிகாரம்,

‘கடிமதில் வாயில் காவலிற் சிறந்த
அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்கு’

என்று, கோவலன் மதுரைக்கோட்டை வாயிலைக் கடந்து சென்ற செய்தியைக் குறிக்கின்றது. ‘கிரேக்கர்கள், அயோனியர்கள், உரோமர்கள் ஆகிய மத்தியதரைக் கடல் நாட்டினர் அனைவருமே அந்நாளில் ‘யவனர்’ என்ற பொதுப்பெயரால் அழைக்கப்பட்டனர்’ என்பர். இங்கே குறிக்கப்பெற்ற கோட்டைக் காவலரான யவனர் ‘கிரேக்கர்’ என்றே அறிஞர்கள் கூறுவர்.

உரோம நாட்டுத் தொடர்பு

பழைய மதுரைப் பாண்டியர்களுக்கும் உரோம நாட்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் நிலவிவந்தன. மதுரையைச் சுற்றிலுமுள்ள இடங்களில் அகழ்ந்து எடுக்கப் பெற்ற உரோமநாட்டு நாணயங்கள் இதனைக் காட்டுகின்றன. கி.மு. 27இல் உரோமப் பேரரசனாக இருந்தவன் ‘அகஸ்டகசீசர்’ என்பவன். இவன் அவைக்குப் பாண்டிய நாட்டு மதுரையினின்றும் தூதுவர்கள் சென்றனர். சீசரின் காலத்தைய உரோம நாணயங்கள், மதுரை மாவட்டத்திலே, பூமிக்கு அடியிற் புதையுண்டிருந்து, கிடைத்துள்ளன.

எகிப்தின் தொடர்பு

எகிப்திய நாட்டுப் பேரழகியான கிளியோ பாத்திராவிற்குத் தமிழகத்தின் முத்துக்களின்பால் மயக்கம் இருந்தது. இவ்வாறு கூறப்படும் வரலாறு, பாண்டிய நாட்டிற்கும் எகிப்திய நாட்டிற்கும் இடையே நிலவிய பழைய தொடர்புகளை நன்கு வலியுறுத்துவதாகும்.