பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

21



பாபிலோனின் தொடர்பு

‘சாலமோன்’ என்னும் பேரரசன் உலகப் புகழ்பெற்ற பழையகாலப் பேரரசருள் ஒருவன். இவன் பாபிலோனில் இருந்து சிறப்புடன் பேரரசு செலுத்தியவன் ஆவான். பாபிலோன் நகரத்திலே தேக்கும், மயில் தோகையும் பயன்படுத்தப்பட்டதாகவும், அவை ‘ஒபிர்’ என்ற இடத்திலிருந்து வந்ததாகவும் குறிப்பு ஒன்று காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ‘ஒபிர்’ தமிழகத்தின் ‘உவரி’யே என்பார்கள். ‘மதுரைப் பாண்டியர்க்கும் பாபிலோனியருக்கும் பழைய தொடர்புகள் பல இருந்தன’ என ஆராய்ச்சியாளர்கள் இதனால் அறுதியிட்டுக் கூறுகின்றனர்.

தாலமியும் பிளினியும்

கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ‘பிளினி’ என்பவர். கி.பி. 140இல் வாழ்ந்தவர் ‘தாலமி’ என்பவர். இவர்கள் எழுதியுள்ள குறிப்புக்களிலும் பாண்டியரின் மதுரைப் பேரரசினைப் பற்றிய குறிப்புக்கள் சில காணப்பெறுகின்றன.

அராபியர் வாணிகம்

தமிழ் அரசர்களின் படையணிகளுள் குதிரைப் படை வலிமைமிக்க ஒரு பகுதியாகவே விளங்கியிருக்கிறது. அக்குதிரைகளுள் பெரும்பகுதி, அராபியப் பகுதி நாடுகளினின்றும் வந்தவை என்பார்கள். இதனால், தமிழ் நாட்டிலே, அந்நாளில் அராபியரின் வாணிகமும் பெருமளவில் நிகழ்ந்து கொண்டிருந்தது எனலாம். மதுரையும் மதுரைப் பாண்டியரும் உலகறிந்த புகழுடையவர் என்பதனை இச்செய்திகள் காட்டுவதாகும்.

இப்படியாகவும், இன்னும் பலவாறாகவும் காணப்படுகின்ற பழைய செய்திகள், பாண்டியரின் பேரூரான மதுரைப் பேரூர், பழைய நாளிலேயே உலகறிந்த புகழுடையதாகவும், ‘அந்நாளைய உலகத்துப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பும் அரசியல் தொடர்பும் கொண்டிருந்த பெருநகரமாகவும் விளங்கிற்று’ எனச் சான்று பகர்கின்றன.