பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

முத்தமிழ் மதுரை


வேண்டினான். அப்போது அவருடைய அருளினாலே பாய்ந்தோடி வந்தது ஒரு பேராறு. அதுவே வையைப் பேராறு ஆகும். வேகவதி எனவும் இதற்குப் பெயர் உண்டு. நீர் வேட்கை தீர்ந்த குண்டோதரனுக்கு வேலை வேண்டுமல்லவா? வையை நீரைத் தேக்கிவைக்கப் பல குளங்களை வெட்டுமாறு ஈசன் அவனை ஏவினார். அவனும், அவராணைப்படி சென்று பல குளங்களை வெட்டினான்.

திருப்பரங்குன்றத்திற்கு வடக்கே இப்போதும் ஓர் ஏரி இருக்கிறது. ‘தென்காற் கண்மாய்’ என்று இதனை வழங்குகிறார்கள். இதன் கரையினைப் ‘பூதம் கண்ட கரை’ என்றும் சொல்லுகிறார்கள். ‘இதன் அருகிலே ஒரு மலையும் இருக்கிறது. இதற்குக் ‘கூடைதட்டிப் பறம்பு’ என்று பெயர்.

அந்தக் குளம் குண்டோதரனால் வெட்டப்பட்டது எனவும், அவன் வெட்டிய மண்ணைக் கொட்டி உயர்த்தியதே அந்தக் குளத்தின் கரையெனவும், அவன் கூடையைத் தட்டிய இடமே கூடைதட்டிப் பறம்பாயிற்று எனவும் சொல்லுகின்றார்கள்.

மேலைச் சித்திரை வீதியிலே ஒரு மண்டபம் இருக்கிறது. ‘அன்னக்குழி மண்டபம்’ என்று அதற்குப் பெயர். குண்டோதரன் அன்னத்தை அள்ளி உண்ட காலத்திலே குழி விழுந்துபோனது அந்த இடம் என்கிறார்கள்.

உக்கிரப் பெருவழுதி

சங்கத் தமிழ் நூல்களுள், ‘பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி’ என்பவனை ‘ஐயூர் முடவனார்’ பாடிய பாட்டொன்று உள்ளது. திருவிளையாடல்களும் ஓர் உக்கிரப் பெருவழுதியைக் குறிப்பிடுகின்றன.

மலயத்துவச பாண்டியனைப் பற்றி முன்னர்க் கூறினோம். அவனுக்கு ஒரு மகனும் பிறந்தான். அவன் பெயரே ‘உக்கிரப்பெருவழுதி’ என்பது. சடையுடன் பிறந்ததனால் ‘கோச்சடில வர்மன்’ என்றும் அவனை அழைத்தனர். அவனைப் பெற்றவள் ஆதிகுடியிற் பிறந்த ‘வடிவ மங்கை’ என்னும் பெயருடையவள் ஆவாள்.

மதுரைக்குத் தெற்கே ‘கோச்சடை’ என்ற பெயருடன் ஓர் ஊர் இந்நாளிலும் விளங்குகின்றது. இது இவனால் அந்தணர்க்கு முற்றூட்டாக வழங்கப் பெற்றது என்கின்றனர். இவன் மனைவியின் பெயர் ‘வடிவணங்கு’ என்பதாகும். இவன்