பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

முத்தமிழ் மதுரை


உணருமாறு சிவபிரான் செய்தனர். அந்தச் செய்யுள், ‘கொங்குதேர் வாழ்க்கை’ எனத் தொடங்கும் அருமையான குறுந்தொகைச் செய்யுளாகும்.

இவ்வாறு, மதுரைப் பேரூருக்கும் சிவபிரானுக்கும் தொடர்புகாட்டி வழங்கும் செய்திகள் பலவாகும். இதனால், ‘சிவபிரான் உவந்த மதுரை’ என்று இதனை நாம் கூறலாம்.

8. பெளத்தர் உவந்த மதுரை

தோற்றுவாய்

பெளத்த மதம், கி.மு. ஐந்தாவது நூற்றாண்டிலே கெளதம புத்தரால் தோற்றுவிக்கப்பெற்ற மதமாகும். அரிய கொள்கைகளையுடைய இந்த மதத்தைச் சார்ந்தோர், பழந்தமிழகத்தில் இருந்திருக்கின்றனர். ‘மணிமேகலை’ என்னும் நூலை இயற்றிய சான்றோரான மதுரைக் ‘கூலவாணிகன் சாத்தனார்’ இந்தச் சமயத்தைச் சார்ந்தவரே. இவரியற்றிய செய்யுட்கள் சங்கத் தொகை நூற்களுள்ளும் காணப் பெறுகின்றன. இதனால், கடைச்சங்க காலத்திலே, மதுரைப் பேரூரிலே, புத்தரின் கொள்கைவழிப்பட்ட மக்களும், புலவர்களும் பலர் இருந்தனர் என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

அசோகரின் சாசனம்

கி.மு. 273 முதல் கி.மு. 232 வரையில் வடநாட்டிற் பேரரசராக வீற்றிருந்தவர் அசோகர் என்பவர். இவர் மோரிய மன்னர்களுள் தலைசிறந்தவர் ஆவர். இவர் வெட்டுவித்துள்ள சாசனங்களுள், செளராட்டிர தேசத்துக் கிர்னார் நகருக்கு அருகேயுள்ள பாறைக் கல்வெட்டு ஒன்று, இவர் பாண்டிய நாட்டிலும், மக்களுக்கும், கால்நடைகளுக்கும் மருத்துவ விடுதிகளை ஏற்படுத்திய செய்தியைக் கூறுகின்றது.

கி.மு.258-ல் ஏற்பட்டதாகக் கருதப்படும், பெசவார் நகருக்கு அருகிலுள்ள பாறையிலே காணப்படுகின்ற மற்றொரு சாசனம், பாண்டிய நாட்டிலேயும் அசோகரின் ‘தருமவிசயம்’ என்னும் அறவெற்றி அடிக்கடி கைப்பற்றப் பட்டதைத் தெரிவிக்கிறது. இஃது அசோகர் பெளத்த நெறியைத் தமிழகத்திலும் பரப்பியதனைக் குறிப்பதாகும்.