பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

29



யுவாங் சுவாங்

இவர் ஒரு சீன நாட்டவர் ஆவர். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்து பல ஊர்களையும் சென்று கண்டவர். கி.பி. 640இல் இவர் காஞ்சிபுரத்திற்கும் வந்தார். ‘பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரைக்கு அருகே, அசோகரின் தம்பியான மகேந்திரரால் கட்டப்பெற்ற ஒரு புத்த விகாரை இருந்ததாகவும், அதற்குக் கிழக்கே அசோகரால் கட்டப்பெற்ற ஒரு தூபி இருந்ததாகவும், அவை இரண்டும் பாழடைந்து கிடந்ததாகவும்’ இவர் குறிப்பிடுகின்றனர்.

மகேந்திரர்

மகேந்திரர் அசோகரின் தம்பியாவார். இவர் தாமிரபரணி நாட்டினை அடைந்து, அதன் பின்னரே இலங்கைக்குச் சென்றனர் என்பார்கள். இந்த மகேந்திரரை அசோகரின் மகனார் எனவும் வேறு நூல்கள் கூறுகின்றன. இவருடன் இலங்கைக்குச் சென்றவர் அரிட்டர் என்பவர். இவர் பெயரால் ‘அரிட்டாபட்டு’ என்றோர் ஊர் உள்ளது. மதுரை மாவட்டத்திலிருக்கும் இவ்வூர் அரிட்டரின் பெயரால் அமைந்ததே என்று ஆராய்ச்சியாளர் கூறுகிறார்கள்.

மதுரைக்காஞ்சி கூறுவது

‘மதுரை நகரில் பெளத்தப் பள்ளிகள் பல இருந்தன’ என்று, மதுரைக் காஞ்சி என்னும் நூல் கூறுகிறது. இந்நூல் "மாங்குடி மருதனார்” என்னும் புலவரால் பாடப்பெற்ற பெருமை உடையதாகும். இவர், அரசனாகிய நெடுஞ்செழியனுடன் நெருங்கிய அன்பு கொண்டிருந்தவரும் ஆவர். இதனால், இவர் கூறுவதனை உண்மையுரை என்றே நாம் கொள்ளலாம்.

‘கணவரும் மனைவியரும் தம் பிள்ளைகளுடன் கூடியவராகப் பூசைக்கு வேண்டிய பொருள்களுடன் சென்று வழிபட்டனர்’ என்றும் அவர் கூறுகின்றனர்.

‘பூவினர் கையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்கும் கடவுட் பள்ளி’

என்ற தொடர்களும், ‘பூசைக்கு வேண்டும் பூவினை யுடையவராய் வணங்கினவராய் மிகுத்துத் துதித்துப் பாதுகாத்தலை நடத்தும் பெளத்தப் பள்ளி’ என அவற்றுக்கு நச்சினார்க்கினியர் கூறும் உரையும், இதனைத் தெளிவுபடுத்தும்.