பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

முத்தமிழ் மதுரை



மலைய நாடு

பாண்டிய நாட்டைச் சேர்ந்த மலைய நாட்டிலே பிறந்தவர் ‘வச்சிரபோதி’ என்னும் பெளத்தப் பெரியார் (கி.பி. 661- 730) இவரே சீனத்திலும் சப்பானிலும் சென்று பெளத்தக் கொள்கைகளைப் பரப்பிய பெரியார் என்பர்.

முடிவுரை

இதுவரை கூறியவற்றையும், ஆசாரிய தம்மபாலர், வச்சிர போதி, தம்ம கீர்த்தி முதலிய பெளத்தப் பெரியார்கள் பாண்டிநாட்டில் (இது தாமிரபரணி நாடு என்று பாலி மொழியில் வழங்கும்) இருந்தவர்கள் என்பதனையும் அறியும்போது, மதுரைப்பேரூர், பெளத்தர்கள் சிறந்திருந்த பேரூராகவும் ஒரு காலத்திலே திகழ்ந்தது என்று நாம் அறியலாம்.

9. சமணர் திரண்ட மதுரை

சமணர்கள்

‘சமணர்கள்’ என்றால் துறவிகள் என்பது பொருள். துறவு நெறியினை வற்புறுத்திக் கூறிய மதம் இது. அதனால் ‘சமணம்’ என்று அழைக்கப்பெற்றது. சமண சமயக் கடவுள் ‘அருகதேவர்’ என்பர். இந்தக் கொள்கைகளை ஆதியிலே ‘விருசப தேவர்’ பரப்பினார் எனவும், அவரைத் தொடர்ந்து இதுவரை 24 தீர்த்தங்கரர்கள் (பெரியார்கள்) தோன்றியுள்ளனர் எனவும், இனியும் இருபத்து நால்வர் தோன்றப்போகிறார்கள் என்பதும் இவர்கள் கருத்து. இவர்கள் மூன்று பிரிவினர்களாகப் பிற்காலத்து விளங்கினார்கள். சுவேதாம்பரர், திகம்பரர், ஸ்தானவாசியர் என்பவர் அவர். அவருள், திகம்பர சமணத் தவரே தமிழ் நாட்டில் நிறைந்து இருந்தார்கள். இவர்கள் உருவ வழிபாட்டினர்.

வர்த்தமானர்

சமணரின் கடைசித் தீர்த்தங்கரர் இவர் ஆவார். இவர் கி.மு. 527 இல் தம் எழுபத்திரண்டாவது வயதிலே வீடுபேறு அடைந்தார். இவருக்குப் பின்னர் இவர் வழிவந்த மாணவர்கள் பலரும் இந்த மதக் கொள்கைகளைப் பரப்பினார்கள்.