பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

33


அழகர் கோயில் இருக்குமிடமாகத் திகழ்கின்றது. திருவிளையாடற் கதையினையொட்டி ‘இடபகிரி’ எனவும் இம்மலையினை அழைக்கின்றார்கள்.

பசுமலை

மதுரைக்கு அருகிலிருக்கிற ஒரு மலை இது. மாயப் பசுவைப் பெருமானின் ஏவலால் நந்திப் பெருமான் கொன்ற பிறகு, அந்தப் பசுவின் உடலே இப்படி மலையாகச் சமைந்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. இங்கும் சமணர்கள் பலர் இருந்தார்கள்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றப் பெருமான் கோயில் கொண்டிருக்கும் இதன்கண்ணும், சமணத் துறவிகள் இருந்த பல குகைகள் இன்றும் காணப்படுகின்றன. தீர்த்தங்கரரின் உருவமும் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது.

சித்தர் மலை

இந்த மலை ‘மேட்டுப்பட்டி’ என்ற ஊரிலே இருக்கிறது. இங்குக் காணப்படும் குகைகளும் கற்படுக்கைகளும் சமணர்களின் இருப்பிடமாயிருந்த இதன் தன்மையைக் காட்டுகின்றன.

சமணமலைப் பாறைகள்

இவை மதுரைக்கு மேற்கே சுமார் ஐம்பது கல்தொலைவில் உள்ளன. அங்கங்கே சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் இம்மலையிற் செதுக்கப்பட்டிருப்பதனை நாம் காணலாம். இவ்வாறு, மதுரைப்பேரூரும், மதுரைச் சுற்றுப்புறங்களும் சமணர் வாழ்ந்து சிறந்திருந்த இடங்களாக விளங்கின என்று நாம் அறியலாம்.

கவுந்தி அடிகள்

சிலப்பதிகாரத்திலே, கோவலன் கண்ணகியர்க்கு உறுதுணையாக விளங்கிய அம்மையார் இவர். இவர் சமண சமயத்துப் பெண்பால் துறவியர். சமணசமயத்து அறவுரைகளைக் கேட்கும் பொருட்டாக, இவரும் மதுரை செல்லுகின்றனர். இவர் செலவு பொருத்தமானதே என்பதனை, மதுரை நகரைச் சூழவும் சிறப்புடன் வாழ்ந்திருந்த எண்ணாயிரவர் சமணரைப்பற்றிய செய்திகள் விளக்குவனவாகும்.