பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

முத்தமிழ் மதுரை



இவ்வாறு, ஒருகாலத்தில் சமணர் பல்லாயிரவர் வாழ்ந்த பேரூராகவும், பாண்டியனே சமணனாக விளங்கிய சிறப்பினைக் கொண்டதாகவும் மதுரைப் பேரூர் திகழ்ந்தது.

10. சிலம்பு காட்டும் மதுரை

அதிராச் சிறப்பின் மூதூர்

சிலப்பதிகாரத்தின் ஆசிரியரான இளங்கோவடிகள் மதுரையின் சிறப்பினை மனமுவந்து போற்றுகின்றனர். “சிறப்புடைய பேரூர்களாகச் சில ஒருகாலத்தே விளங்கினும், பின்னர் அவை அச்சிறப்பிற் குன்றிச் சீரழிந்து போதலும் நிகழ்வதேயாகும். இத்தகைய ‘சிறப்பிலே குன்றிப் போகின்ற’ ஒரு நிலைமை மதுரைக்கு என்றுமே வந்தடையாது” என்று, சிலப்பதிகாரப் பதிகம் போற்றுகிறது. ‘அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்’ என்று, மதுரையின் நிலைபெற்ற சிறப்பினையும் அது உரைக்கின்றது.

தீதுதீர் மதுரை

‘தென் தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை’ என்றும் சிலம்பு மதுரையைப்பற்றிக் கூறுகின்றது. ‘தென்திசைக்கண் தென்னவனாகிய பாண்டியனாலே பேணிக்காக்கப்பெறுவது; தமிழ்வளங் குன்றாது வாழுகின்ற புகழ் நிறைந்தது; நன்மை நிரம்பிய நாட்டிலுள்ளது; தீமையற்ற சிறப்பினை உடையது மதுரைப் பேரூர்’ என்றெல்லாம் மதுரைப் பேரூரினை மனமுவந்து போற்றுகிறது சிலம்பு.

தென்னவன் வாழ்க

கோவலன், கண்ணகி, கவுந்தியம்மை ஆகியோர் மதுரை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். உறையூரைக் கடந்து, ஓர் இளமரக்காவினிடத்தே இருந்த ஓர் இருக்கையிற் சென்று அமர்ந்திருக்கின்றனர். அவ்வேளை முதிய மறையவன் ஒருவன் அங்கே வருகின்றான். அவன் வாய் தென்னவனின் பெருமையைப் போற்றிக் கொண்டிருக்கிறது. அவன் வாய்மொழியாகவே மதுரையின் சிறப்பினை, மதுரை மன்னனின் உயர்வோடும், இளங்கோவடிகள் எடுத்துக் கூறுகின்றனர்.

பொங்கிய கடல்

‘தன் வலிமையின் சிறப்பினை வேற்றரசர்கள் பலருக்கும் தன் திருவடிகளாலேயே உணர்த்திய பெருமை உடையவன்