பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

முத்தமிழ் மதுரை


சேற்றிலே நீராடியும்; மகரந்தம் பொருந்திய கழுநீர் சண்பகம் ஆகியவற்றால் தொடுத்த மாலையோடு மாதவி மல்லிகை மனைவளர் முல்லை ஆகியவற்றின் விரிந்த மலர்களைத் தொடையல்போற் பரப்பியுள்ள படுக்கையிடத்தே பொருந்தியும்; சமையல் அறைகளிலிருந்து வருகின்ற தாளிதப்புகை, அகன்ற கடைவீதிகளிலே ஓயாது வாணிபம் புரிவோர் அப்பம், மோதகம் ஆகியவற்றைச் சுடுவதனின்றும் எழும் புகை, ஆடவரும் மகளிரும் உடனுறையும் இல்லத்தின் மேன்மாடத்திலே உண்டாக்கிய அகிற்புகை, அந்தணரின் ஆகுதிப்புகை ஆகிய பல்வேறு புகைகளினூடும் அளாவியும்;

“வெற்றிப் போருடையவனாக விளங்கும் பாண்டியனின் அரண்மனையிலே, அளந்து உணர்வதற்கும் அறியாத அளவிலும், ஆருயிரைப் பிணிக்கும் இயல்புடனும் விளங்கும் நறுமணக் கலவைகளின் தொகுதிகளைப் பிறரும் அறியுமாறு செய்வதற்கு, அவற்றின் மணத்தைத் தாங்கி வெளிப்பட்டும்;

“புலவர்களின் செம்மையுடைய நாவினாலே போற்றப்பட்ட சிறப்பினையுடைய பொதியத்துத் தென்றலைப் போன்றிராத மதுரைத் தென்றல் இதோ வந்து வீசுகிறதே இதனைக் காண்க. பாண்டியனின் செல்வம் மலிந்த மூதூர் மிகத் தொலைவானதன்று.”

எதிர்கொள்ளும் ஆர்ப்பு ஒலிகள்

பாணர்களின் பேச்சினாலே உள்ளம் தெளிவு பெற்றான் கோவலன். கவுந்தி அம்மையுடனும், கண்ணகியுடனும் மதுரைநோக்கிச் செல்லுகின்றான். அப்பொழுது மதுரையினின்றும் எழுகின்ற ஆரவாரமான பேரொலி அவர்களின் காதுகளிலே விழுகின்றது. மதுரை நகரினின்றும் வரும் அந்த ஒலியைக் கேட்டு, அவர்களின் வழிநடைத் துன்பமெல்லாம் அப்போதே நீங்குகிறது.

காலை முரசம்

அரிய அழித்தல் தொழிலுக்கு உரிய கடவுள் சிவபெருமான்; அவனுக்கு உரியதான அகன்ற பெருங் கோயில் ஒன்று அந்நாளைய மதுரையிலே இருந்தது. பெரும்புகழ்பெற்ற மன்னவன் பாண்டியன்; அவனுடைய மிக்க புகழமைந்த அரண்மனையும் மதுரையில் இருந்தது. இவ்விரண்டு கோயில்களினின்றும், பகுதிப்பட்ட சிறப்பினை உடையவான பலவகை வாத்தியங்களாலும் சிறப்புற்ற, காலை முரசத்தின் பெரிதான ஒலிகள் எழுந்துவந்தன.