பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

37



நான்மறையும்- பாடலும்

நான்கு வேதங்களை ஓதுபவரான அந்தணர்கள், காலையிலே வேதங்களை ஓதிக்கொண்டிருக்கின்ற ஓசையும் எழுந்தது.

பெருந்தவமுடையவர் பலரும், தத்தம் வழிபாட்டுப் பாடல்களை ஓத, அதனால் மிகுதியாக எழுந்த பேரொலியும் வந்தது.

நாளணி முழக்கம்

மீளாத வெற்றியினையுடைய வேந்தனின் சிறப்போடு கூடியதாக, வாள்வீரர்கள் முழக்கிய நாளணி முழவுகளின் முழக்கமும் எழுந்தது. போரிலே பகைவரிடமிருந்து கைப்பற்றிக் கொண்ட களிறுகளின் பிளிற்றொலியும், காட்டிலே பற்றிக் கொணர்ந்த வலிய களிறுகளின் முழக்கமும், பந்தி பந்தியாக நின்ற குதிரைகளின் கனைப்பும், கிணைப் பறையினையுடைய மள்ளர்கள் எழுப்பும் வைகறைப் பாணியாகிய இசையும் எழுந்தன. இவையெல்லாம், கருங்கடலின் ஆர்ப்பொலிபோல ஒலித்தன. அதனால், கூடல்நகரிலே மகிழ்ச்சி மிகுந்தது. இந்த ஆர்ப்பொலிகள் கோவலன் ஆகியோரை எதிர்கொண்டு வரவேற்பனபோல, அவர்களை வந்து அடைந்தன.(சிலம்பு 11: 137-150.)

காலையிலே வையை

அந்த ஒலிகளைக் கேட்ட அவர்கள், மகிழ்வுடன் மதுரையை நோக்கி நடக்கின்றனர். நடந்து, மதுரையின் ஒரு திசையிடத்தே அழகாக விளங்கிய வையைக் கரையினையும் அடைகின்றனர். வையையின் வனப்பிலே தங்களை மறந்து, அவர்கள் மயங்கி நின்றும் விடுகின்றனர்.

ஆற்றின் கரையிலே, எண்ணற்ற மலர்த்திரள்கள் எழிலுடன் பூத்திருக்கின்றன. குரவம், மகிழம், கோங்கம் , வேங்கை, வெண்கடம்பு, சுரபுன்னை, மஞ்சாடி, மருதம், சேடல், செருந்தி, சண்பகம், பாதிரி ஆகிய மரங்களின் கிளைகளில் எல்லாம் மலர்கள் நிறைந்திருக்கின்றன. குருக்கத்தியினும் முல்லையினும் பூக்கள் விளங்குகின்றன. முசுண்டை, அதிரல், கூதாளம், வெட்பாலை, மூங்கில், கொன்றை, பிடவம், மயிலை என்னுமிவற்றிலும் பூக்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து, அனைத்தும் ஒரே மலர்க்காடாகத் தோன்றுகின்றன. உயரமான ஆற்றின்கரையோ, மலர்க் கோவையான மேகலையைக்