பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

முத்தமிழ் மதுரை


சென்று தங்குவதற்கு உரியதல்லாத புறஞ்சிறை மூதூர் என்பதும் அதுவாகும். அங்கே, அவர்கள் தங்கினர்.

காலை முரசம்

கதிரவன் மதுரை நகரைத் துயிலெழுப்பி வானத்தே எழுகின்றான். நெற்றிக்கண்ணால் நோக்குதலையுடைய சிவபெருமானின் கோயிலிலும், கருடச் சேவலைக் கொடியாக உயர்ந்த திருமாலின் கோயிலிலும், வெற்றி தரும் கலப்பையினைப் படையாக உயர்த்த பலராமனின் கோயிலிலும், கோழிச் சேவலைக் கொடியாக உடைய முருகப் பிரானின் கோயிலிலும், அறநெறியாளரின் பள்ளிகளிலும், மறவொழுக்கம் விளக்க முறுகின்ற மன்னவனின் கோயிலிலும், வெண்சங்கின் முழக்கத்துடனே காலை முரசத்தின் பேரொலியும் எழுந்தன.

சுருங்கை வழி

கவுந்தி அம்மையிடம் விடைபெற்றுக் கோவலன் மதுரைப் பேரூரினைக் காணச் செல்லுகின்றான். அவனைத் தொடர்ந்து நாமும் செல்வோம்.

முதலிற் கட்டுவேலி சூழ்ந்த காவற்காடு வருகிறது. அதனைக் கடந்ததும், நகரைச் சூழ்ந்து கிடந்த அகழி தோன்றுகிறது. அந்த அகழியின் ஒருபுறத்தே, யானைத்திரளின் போக்குவரத்திற்கென அமைந்த சுருங்கைவழி ஒன்றும் இருக்கிறது. அதன் வழியாகச் செல்லுகின்றான் கோவலன்.

கோட்டை வாயில்

கோட்டை வாயிலிலே கடுமையான காவல் விளங்குகிறது. காத்தலிலே சிறந்தவரும் கொலைவாளினை ஏந்தியவருமான யவன வீரர்கள் அங்கே விழிப்புடன் காத்து நிற்கின்றனர். அவர்கள் ஐயமுறாதபடி புகுந்து சென்று, கோட்டையின் உட்பகுதியினை அடைகின்றான் கோவலன்.

அருங்கலச் செப்பு

இந்திரனின் அருங்கலன்களைப்பெய்து வைத்திருக்கும் செப்பானது வாய்திறந்து கிடப்பதுபோல, வளமுடன் தோன்றிய கோட்டையின் உட்புறப் பகுதியிலே நுழைகின்றான் அவன்.

திருவீதிகள்

செழுமையான குடியிலே தோன்றிய செல்வவான்களோடு, நாடுகாவல் என்னும் பணிபூண்டோரும் இன்பமுடன் வாழ்ந்திருக்கும் வீதியினைக் கண்டு இன்புறுகின்றான் கோவலன்.