பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

43



கோட்டைக் காவல்

இதன்பின், கவுத்தியடிகள் கண்ணகியை மாதரிபால் அடைக்கலமாக ஒப்பிக்க, அவளுடன் அவர்கள் மதுரைக்குட் செல்லுகின்றனர். அந்த இடத்திலே மதுரைக் கோட்டையின் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றிச் சிலம்பு கூறுகிறது.

“கண்ணகியுடன், மாலை ஞாயிறு மேற்றிசையிலே சென்று மறைகின்ற வேளையிலே, மாதரி தன் வீடுநோக்கிச் செல்லுகின்றாள். காவற்காடும் அகழியும் கடந்தபின், அவர்கள் கோட்டையை அடைகின்றனர்.

வளைவாக அமைந்த விற்பொறி அமைந்த கடமும், கருவிரல் குரங்கின் உருவிலே அமைந்த பொறியும், கல்வீசும் கவண்பொறியும், கொதிக்கும் எண்ணெயைச் சொரியும் கருவிகளும், சாணகம் கரைத்துக் கொதிக்க வைத்து ஊற்றும் மிடாக்களும், கற்களிட்ட கூடையும், தூண்டிற் பொறிகளும், தொடக்குப் பொறியும், ஆண்தலை அடுப்புப் பொறியும், கவறுபட்ட நெடுங்கொம்புகளும், கழுக்கோலும், அம்புக் கட்டுகளும், மறைய நின்று போரிடற்கான புழைகளும், தலைவாங்கும் ஐயவித் துலாமும், தொடுவார் கைகளை ஊடுருவிச் சென்று வருத்தும் ஊசிப் பொறியும், பகைவர் மேற்சென்று தாக்கும் கிச்சலிப் பொறியும், பன்றிப் பொறியும், கோட்டை கதவுகளுக்கு இட்டிருக்கும் எழுவும், சீப்பும் கணையமும், எறிகோலும், குந்தமும், வேலும், குருவித்தலைகளும் ஆகிய பலவற்றைக் கொண்ட காவல் ஏற்பாடுகள் நிரம்பியிருந்தன.

நாள் முழுவதும் கோட்டை வாயிலிற் கயற்கொடி, பறந்துகொண்டிருந்தது. இவற்றைக் கண்டபடியே மாதரி கண்ணகியுடன் தன் வீடு சென்றனள். (சிலம்பு 15: 203-217)

மதுரைக் கோட்டையிலே இத்துணைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் விளங்கின. பாண்டியரின் போரியல் அறிவு எவ்வளவு உயர்வுடன் இருந்தது என்பதனை இவை எல்லாம் காட்டுகின்றன.

11. சங்க காலத்து மதுரை

‘மதுரை’ என்று குறிப்பிடுகிற போது, இன்று இருக்கிற மதுரைப்பேரூரை நாம் நம் உள்ளத்திலே கொண்டுவிடக் கூடாது. சங்ககாலத்து மதுரை இஃதன்று. இம் மதுரைக்குக்