பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

முத்தமிழ் மதுரை


கிழக்கே வையையாற்றின் தென்கரையிலே அஃது அமைந்திருந்தது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டளவில் தமிழகத்தே ஏற்பட்ட களப்பிரர்களின் படைஎழுச்சியினாலே அதுஅழிந்து போயிற்று.

திருப்பரங்குன்றத்தைக் குறிப்பிடுகின்ற புறநானூற்றின் நூற்றுநாற்பத்தொன்பதாவது பாடலுள், தாயங் கண்ணனார் என்னும் சான்றோர்,

‘கொடி நுடங்கு மறுகிற் கூடற் குடாஅது
பல்பொரி மஞ்ஞை வெல்கொடி உயரிய
ஒடியா விழவின் நெடியோன் குன்றம்’

என்று கூறுகின்றனர். ‘திருப்பரங்குன்றம் மதுரைப் பேரூருக்கு மேற்காக இருப்பது’ என்னும் இதனால், இன்றைய பரங்குன்றத்திற்குக் கீழைத் திசைக்கண்ணேயே அந்நாளைய மதுரை இருந்தது என்பது புலனாகும்.

நக்கீரனாரின் திருமுருகாற்றுப்படையும், ‘மதுரைக்கு மேற்கிற் பரங்குன்றம்’ என்றுதான் கூறுகின்றது. இதனால், சங்க காலத்துப் பேரூரான மதுரை இன்று காணப்பெறுகின்ற மதுரையன்று எனலாம்.

வையையின் தெற்குக் கரையிலேதான் அந்த மதுரை இருந்தது என்பதனை,

‘மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித் தேமலர் நறும்பொழில் தென்கரை எய்தி’

என்ற சிலப்பதிகார அடிகளினாலே நாம் அறியலாம்.

இன்றுள்ள மதுரைக்குச் சற்றுத் தொலைவிலே, பழமதுரை மேடு என்றொரு மேடு உள்ளது. அங்கே பழமதுரை முனியன் கோயில் என்றொரு கோயிலும் இருக்கிறது. அந்த இடத்திலே தான் மதுரைப் பேரூர் சங்ககாலத்திலே விளங்கியிருக்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மதுரை நகரின் அமைப்பு

பழைய மதுரை நகரம் தாமரைப்பூவினைப் போன்று வட்டவடிவமாக அமைந்திருந்தது. அதனைப் பழைய பரிபாடற் செய்யுள் ஒன்று இவ்வாறு கூறுகிறது:

"சிறப்புடைய மதுரையாகிய பேரூரானது திருமாலின் தொப்புளிலே பூத்த தாமரைப் பூவினைப் போன்றதாகும்.