பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

45


அப்பூவின் அகவிதழ்களைப் போன்றவை அதன் தெருக்கள். அவ்விதழ்களின் நடுவே உள்ள அரிய தாமரைக் கொட்டையினைப்போல விளங்கியது, பெருமையிற் சிறந்தவனாகிய பாண்டியனின் அரண்மனை. அந்நகரிலேயிருக்கிற குடிமக்கள் குளிர்ந்த தமிழ்மொழியினை பேசுபவர்கள். அவர்கள் அத் தாமரைமலரின் மகரந்தப் பொடியினைப் போன்றவராவர். அவர்களிடத்துப் பரிசில் பெறுவதற்காக வேற்று நாட்டிலிருந்து வரும் இரவலர்கள், அம்மகரந்தப் பொடிகளை உண்ணவரும் வண்டுகளை ஒத்தவர்கள் ஆவர்."

இந்த வருணனை, மதுரை நகரத்தின் வட்டவடிவமான அமைப்பினை நமக்கு நன்கு அறிவுறுத்துகின்றது. சிறந்த தொரு நகரமைப்புத் திட்டப்படி, சங்ககால மதுரை அன்று அமைந்து விளங்கிற்று என்பதனை, இது காட்டுவதாகும்.

கோட்டை மதில்

இப்படி அமைந்த இந்நகரைச் சுற்றிலும் இருவகையான கோட்டை மதில்கள் இருந்தன. அவை அகமதில் எனவும் புறமதில் எனவும் விளங்கின. ஒன்று உட்புறத்தும், மற்றொன்று அதனையடுத்த இடைவெளிக்குப் பின்னர் வெளிப்புறத்துமாக விளங்கின.

புறஞ்சேரி

இந்த இரண்டு கோட்டைகளுக்கும் இடைப்பட்ட வெளியிடம் புறஞ்சேரி என்ற பெயருடனே விளங்கிற்று. இந்தப் புறஞ்சேரியில் அறத்துறை மாக்கள் பலரும் அந்நாளிலே தங்கி வாழ்ந்தனர்.

மதுரை நகரம் வட்டவடிவினதாக அமைந்திருந்தது என்பதனை, ‘இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த இலங்குநீர்ப் பரப்பின் வலம்புணர் அகழி’ எனவரும் சிலப்பதிகார அடிகளும் காட்டும். ‘வளைவுடன்’ என்ற சொல், வட்டவடிவமான தன்மையைக் குறிப்பதனையும் அறிக.

மதுரை நகரின் கோட்டை வாயில்களிலே ‘பந்தும் பாவையும் கட்டித் தூக்கியிருந்தனர்’ என்கிறது திருமுருகாற்றுப் படை பகைவரை மகளிராகக் குறிப்பிட்டு ஏளனஞ் செய்வதற்கான அடையாளங்கள் அவை. அவற்றருகே, செருப்புகன்று எடுத்த, மிகவுயரத்தே பறந்திருக்கும் நெடுங்கொடியும், அந்நாளிலே மதுரையிற் பறந்து கொண்டிருந்ததாம்.