பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

முத்தமிழ் மதுரை



இந்தக் கோட்டை வாயில்களின் காவல் ஏற்பாடுகள் மிகவும் வியப்பானவை. அவற்றின் விரிவைச் சிலப்பதிகாரம் காட்டும். புறக்கோட்டையினைச் சூழ நாற்புறமும் காவற்காடும் அகழியும் விளங்கின. வடக்குப் புறத்து அகழியாக வையைப் பேராறு ஓடிக்கொண்டிருந்தது.

கோட்டையின் நாற்புறத்துக்கும் நான்கு வாயில்கள் விளங்கின. அவை நெடிதான வாயில் நிலையினையும், பலகாலும் நெய்யிடுதலால் கருகின திண்மையான செறிவுள்ள கதவினையும் உடையன. மேகம் உலாவும் மலைபோல் உயர்ந்த மாடங்களையும் அவை தம் மேற்புறத்தே கொண்டிருந்தன.

கண்ணகி கீழ்த்திசை வாயிலின் வழியாகக் கோவலனுடன் மதுரைக்குள் சென்றதாகவும், மதுரையை விட்டு வெளியேறும்போது மேற்றிசை வாயில் வழியாகச் சென்றதாகவும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இது நாற்புறமும் இருந்த வாயில்களைப் பற்றிய செய்தியினை அறிவதற்கு உதவும்.

கோட்டைக் காவலுக்குரியவராக யவனவீரர்கள் அந்நாளில் விளங்கினர் என்கிறது சிலம்பு. இவர்கள், ‘கிரேக்கர்கள் அல்லது அயோனியர்களாயிருக்க வேண்டும்’ என்பார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தெருக்களும் பிறவும்

நகரில் இருந்த பல்வேறு தெருக்களைப் பற்றியும், கோயில்களைப் பற்றியும், ‘சிலம்பு காட்டும் மதுரை’ என்ற பகுதியிலே கூறியிருப்பதனைக் காண்க. கலைமகளுக்குத் தனியாகக் கோயிலொன்றும் அந்நாளிலே இருந்தது. மணிமேகலையிலே இப்படி ஒரு செய்தி காணப்பெறுகின்றது. ‘சிந்தாதேவி கோயில்’ என்று அதற்குப் பெயர்.

நீதி மன்றம்

‘அறங்கூறு அவையம்’ என்ற பெயருடனே மதுரையின்கண் நீதிமன்றம் ஒன்றும் சிறப்புடன் விளங்கிற்று. இதனை, ‘மதுரைக் காஞ்சியின்’ 490-2 அடிகளால் நன்கு அறியலாம்.

இவ்வாறாக, சங்ககால மதுரையின் அமைப்பினைப்பற்றி இன்னும் பற்பல செய்திகள் சங்க நூற்களுள் காணப் பெறுகின்றன. அவையெல்லாம் மதுரைப் பேரூரின் அமைப்பினை, பெரும்சிறப்பினை ஒருவாறாக நாமும் ஊகித்து அறிந்து கொள்வதற்கு உதவுவனவாம்.