பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

முத்தமிழ் மதுரை


சொல்லிவர, அந்த ஏவலர்களுள் ஒருவன், கோவலனைக் கொன்றான். அரசனிடம் சிலம்பும் சேர்க்கப் பெற்றது. அந்தச் செயலால், வளையாத பாண்டியரின் செங்கோன்மையும் அன்று வளையலாயிற்று.

தன் கணவன் கள்வனெனக் குற்றம் சுமத்தப்பெற்றதும், காவலனாற் கொலைசெய்விக்கப் பெற்றதும் அறிந்த கண்ணகி புலம்பினாள். கொதித்து எழுந்தாள். அவள் கொதிப்பினைக் கண்ட ஊரவர் மயங்கினர். அவளோ, தன் கணவன் வெட்டுண்டு கிடந்த இடத்திலே சென்று அவனைக் கண்டபின்னர், வேந்தனிடம் நீதி கேட்பதாகச் சூளுரைத்து, அவ்வாறே சென்றனள்.

அங்கே பாண்டியன் நெடுஞ்செழியன் கண்ணகியின் தோற்றத்தைக் கண்டதும் மனம் கலங்குகின்றான். ‘கள்வனைக் கொல்லுதல் அறநெறியே’ என்று கூறி, அவள் கொதிப்பை ஆற்றவும் முயலுகின்றான். அவள், ‘தன் சிலம்பின் உள்ளிடுபரல் மாணிக்கக் கற்கள்’ என்றதும், பாண்டியன் மிகவும் பதறுகின்றான். கோவலனிடமிருந்து கொண்ட சிலம்பினைக் கொணருமாறு செய்ததுடன், ‘தன் தேவியின் காற்சிலம்பு முத்துக்களை உள்ளிடு பரல்களாக உடையது’ என்றும் கூறுகின்றான்.

கண்ணகியின் காற்சிலம்பு உடைக்கப்படவும், அதனின்றும் ஒரு மணி தெறித்து மன்னவனின் வாய்முன் வீழவும், அவன் நடுங்கினான். ‘யானோ அரசன்? யானே கள்வன்! மன்பதை காக்கும் தென்புலம் காவல் என் முதல் பிழைத்தது. கெடுக என் ஆயுள்’ என்று கதறி வீழ்ந்து, அந்நிலையே இறந்தும் போய் விடுகின்றான்.

பாண்டியரிடம் இத்தகைய அறவுணர்வு இருந்தது! அரசியலிற் சிறுகுறையும் நேராதபடியாகச் செங்கோல் செலுத்திய சிறந்த சிறப்பினர் அவர்கள்! கைகுறைத்தும், உயிர்தந்தும் பழிதுடைத்த நீதியாளர்கள் அவர்கள்! அவர்களின் செயற்கரிய செயலால், அவர்கள் வீற்றிருந்த மதுரைப்பேரூரின் புகழும், ‘அறம் விளங்கிய பேரூர்’ என்ற பெருமையுடன் நிலவுவதாயிற்று!

13. பரிபாடலும் பழமதுரையும்

பரிபாடல் கடைச்சங்கத்துத் தமிழ்ச் சான்றோர்கள் அருளிய எட்டுத்தொகை நூல்களுள் இந்நூல் ஐந்தாவது ஆகும்.