பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

51


மதுரை, வையையாறு, திருமருதந்துறை, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ் சோலைமலை என்பவற்றின் அக் காலத்திய நிலையை அறிந்துகொள்வதற்கு மிகவும் உதவியாகவுள்ளது இந்நூல்.

இந்நூல், பரிபாடல் என்னும் பாவகை கொண்டது. பரிபாட்டு எனவும் இதனைக் கூறுவர். முதற்கண் எழுபது பாடல்களாக இருந்த இந்நூலிற், காலத்தால் மறைந்தனபோக எஞ்சியவற்றை, டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் நன்கு ஆராய்ந்து அச்சிற் பதிப்பித்துள்ளனர்.

1. வையைப் பேராறு

மதுரையின் சிறப்பிற்கு வையைப் பேராறு ஒரு முதன்மையான காரணம் ஆகும். அதுபற்றிய பரிபாடற் பகுதிகளுள் காணப்படும் சில செய்திகளை இப்பகுதியிற் காண்போம்.

மேகங்கள் கடல்நீரை முகந்து நிறைவுற்றுத் தம்முடைய சுமை சுழியும்படியாக மழையைப் பொழிந்தன. அதனால், நிலமெல்லாம் மறைந்து போவதுபோல எங்கும் நீர் நிறைந்தது. மலையிலுள்ள மானினங்கள் பெரிதும் கலங்கின. மயிலினங்கள் களிப்புடன் அகவின. மலையின் மாசனைத்தும் கழிந்துபோக, அருவியும் விரைந்து இழிந்தது. அவ்வருவிநீர் வருகின்றவழிகள் பலவாயிருந்த மலைச்சாரலிலே, புலவர் போற்றிய செய்யுள் பொய்யாகாத படி நிலைநாட்டி, எங்கும் பரந்தது. உழவு முதலிய தொழில்கள் பெருகும்படியாகச் சமநிலத்தும் வெள்ளம் தாவி ஓடியது.

கரை உடைக்கும் பெருவெள்ளம்

வையையின் இருபாலும் மலைபோன்று உயரிய கரைகள் அக்காலத்தே விளங்கின. புது வெள்ளம் கரையை உடைத்தது. அதனை அடைக்கும் பொருட்டாகக் கரைகாவலர்கள் பறையொலி எழுப்பினர். பறையொலியினைக் கேட்ட ஊரிலுள்ளார் கிளர்ந்து எழுந்தனர். அவர்கள் வந்து கரையைப் பேணிக் காத்தனர்.

வெள்ளத்தின் வரவு

நரந்தம் புல்லிற் பரந்தும், வேங்கையினின்று உதிர்ந்த பூக்களைச் சுமந்தும், மலையின் பெரிய மரங்களை அகழ்ந்தும், மேட்டிலுள்ளவற்றைப் பள்ளத்திற் பரப்பியும், புது வெள்ளம் சென்றது. முழவுகளும் பெரும்பறைகளும் முழக்கமிட, ஆடலின்