பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

முத்தமிழ் மதுரை


இயல்பினை அறியாத ஒரு பெண் கண்டவாறெல்லாம் சுற்றிச் சுழல்வதுபோல, வேண்டிய இடங்களிலெல்லாம் தானும் பரவிப் படர்ந்தது புதுவெள்ளம்.

ஓடையிலுள்ள நீரானது மலர்களுக்கு மேலேயும் பெருகியது. இளம் பெண்களின் மணற்பாவைகளை வெள்ளம் சிதைக்க, அவர்கள் அதனால் அழலாயினர். வயல்களுள் வெள்ளம் பாய்ந்து அரிந்த கதிர்களை எல்லாம் சிதைக்க, அங்கே துடிப்பறையின் முழக்கம் எழுந்தது. ‘பாடுபவர் இருந்த பாக்கத்தைக் கொண்டது; கூத்தரிருந்த சேரியை அடைந்தது; கழனியில் வெள்ளம் வந்தது; நாற்றங்கால் வண்டலிட்டு மேடாயிற்று’ என்றெல்லாம். வெள்ளத்தைப் பற்றிய பேச்சுக்களே எங்கும் எழுந்தன.

மலர்களாகிய போர்வையையும், பருமணலையும் மேலே மூடிக்கொண்டு, உலகிற் பசி முதலிய துயரங்கள் நீங்கவும், வண்டினம் ஒலிக்கவும், கரை காவலரை அழைக்கும் பறைகளின் ஒலி முழங்கவுமாக, வையையாறு பெருகி வந்தது.

நீராடச் செல்வோர்

மகளிர், தம் மேகலையை இறுக அணிந்து கொண்டு புறப்பட்டனர். வண்ணநீரை வீசும் கருவிகளையும், பனிநீர் கலந்த சந்தனத்தையும் எடுத்துக்கொண்டு அவர்கள் எழுந்தனர். குதிரைமீதும், பிடியானைமீதும், எருது பூட்டிய வண்டியினும், கோவேறு கழுதைமீதும், குதிரை பூட்டிய வண்டியினும், சிவிகையினும் ஏறியவர்களாக அவர்கள் ஆற்றைநோக்கிப் புறப்பட்டனர்.

மலராத முகைபோன்ற சிறு பருவத்து நங்கையரும், மலர்ந்த மலர்போன்ற இளைய மாதரும், கருமயிரிடையே நரைமயிர் தோன்றியவரும், முழு நரை பெற்ற கூந்தலுடையவருமாக, எல்லாப் பெண்களுமே நீராடற்கு எழுந்து, ஆற்றின் கரையைச் சென்று சேர்ந்தனர்.

அங்கே, நீரின் அழகை வியப்புடன் கண்டு நின்றனர் சிலர். நீரணி மாடத்திலே ஏறிச் சென்றனர் சிலர். மலர் நிறைந்த ஆற்றிடைக் குறையிற் சென்றனர் சிலர்.

தாம் நினைத்த பட்டினத்தைச் சார்ந்து, ஏற்றிவிட்ட பண்டங்களைக் கொடுத்து, ஆண்டுள்ளன கொண்டு, இடையூறு ஏதுவுமின்றி வந்து கரையைச் சேரும் நாவாயை எதிர்கொள்பவரைப் போல விருப்பமுற்றவராக, வையைப் புனலை மக்கள் திரண்டு சென்று எதிர்கொண்டனர்.