பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

53



அவ்விடத்தே, ஒரு களிறு மதங்கொண்டு அலையக் கட்டுக்கடங்காத அதனை அடக்கிச் செலுத்தினர் சிலர். அவர்கள் செயல், பாயும் கயிறும் பாய்மரமும் நீங்கச் சிதையும் நிலையிலே உள்ள மரக்கலத்தைத் திருத்தி, அதனுள்ளே இருந்தோரது நடுக்கத்தைப் போக்கும் ஒரு மீகாமனின் செயலைப் போன்றிருந்தது!

நீராடலின் பின்னர்

நீராடலினாலே களைப்புற்ற மகளிர்கள் கரையில் ஏறினார்கள். அகிற் புகையினால் உடலின் ஈரத்தைப் புலர்த்தினார்கள். மார்பிலே கலவை குழம்பைப் பூசினார்கள். அதன் மணம் எங்கும் கமழ்ந்தது. சிலர் மதுவினை உண்டனர். சிலர், தம்மேலே வெண்துகிலைப் போர்த்தனர். சிலர், தம் கூந்தலிலே வெண்துகிலைச்சுற்றி ஈரம் புலர முறுக்கினர். சிலர், பொன்னாற்செய்த சங்கு, நண்டு, இறவு, வாளை என்பவற்றை நீரிலே இட்டு, ‘விளைக! பொலிக’ என்று வாழ்த்தினார்கள்.

சிலர், நீலமணிபோன்ற தம் கூந்தலிலே பத்துவகைத் துவர்களையும் தேய்த்து நீராடினர். சிலர், எண்ணெய் நீங்குமாறு அரைப்பினைத் தேய்த்தனர். சிலர் மாலையினையும் சந்தனத்தையும், கத்தூரியையும், மதுவையும் நீரிலே இட்டுப் போற்றினர்.

மைந்தர்கள் ஆடல்

பெண்களின் நிலை இவ்வாறாக இருந்தது. ஆண்களின் நிலையும் இவர்கட்குச் சற்றும் குறைந்ததாயில்லை. அவர்களும் புனலிற் பாய்ந்து நீராடினார்கள். பெண்களைப்போலப் பூச்சுப் புனைவுகளிலே இவர்கள் மனஞ் செலுத்தவில்லை. மாறாக, இவர்களின் மனம் வீரவிளையாட்டுக்களிலே சென்றது.

வாழைத்தண்டைக் கையால் தழுவிக் கொண்டு நீரின் மேல் தாவித்தாவிச் சிலர் நீந்திச் சென்றனர். தாழம் பூவின் தாதை அலையிலும் நுரைமேலும் தூவித்தூவி விளையாடினர் சிலர். ஓடத்தில் ஏறி, நீரோட்டத்தோடு சென்றவராகச் சிலர் களித்தனர். புனலுக்கு எதிராக நீந்திச்சென்று சிலர் விளையாடினர்.

பேச்சின் ஆரவாரம்

நீர்த்துறையில் பலரும்பலவாறு பேசி நின்றனர். மொழிகள் ஒன்றையொன்று ஒவ்வாமற் பற்பலவாக ஒரே காலத்தில்