பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

முத்தமிழ் மதுரை


எழுந்தன. அவற்றைத் தெளிவாக எவராலும் கேட்க முடியவில்லை. புல்லாங் குழலின் இசை ஒருபுறமிருந்து எழும். முழவின் ஒலி ஒருபுறமிருந்து எழும். மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுடி ஆகியவற்றின் ஓசைகளும் எழும். இவற்றின் பேரொலியினால், மக்களின் பேச்சொலிகள் எவர்க்கும் கேளாவாயின.

புகழாற் சிறந்தது

வையை, பழையதான மதுரை நகரிலே வாழ்பவர்க்கு இன்பமும் அழகும் மிகப்பலவாக அளித்தது. அதனால், உலகம் அகற்சியை உடையதாயினும், வையையின் புகழை அடக்கிக்கொள்ள மாட்டாதபடியாகவே இருப்பதாகும்.

ஆர்வ மயக்கம்

வையையிலே புதுவெள்ளம் வருகிறது என்றவுடன், மதுரை நகரத்தார்க்குக் களிப்பும் கரைகடந்து விளங்கலாயிற்று. தேரிலேற எண்ணிய சிலர், தேர்க்குதிரைகளைப் பள்ளியோடம் என்னும் வண்டியிற்பூட்டி அதனிடத்தே ஏறிச் சென்றனர். வங்கத்தில் ஏற எண்ணிய சிலர், அதற்குரிய எருதுகளைத் தேரிற்பூட்டி அதிலேறிச் சென்றனர். குதிரைகளுக்கு இடுகின்ற சேணம் முதலியவற்றினை யானைக்கு இட்டனர் சிலர். யானைகளுக்கு எதுவும் அணிய மறந்து ஏறி நடத்தினர் சிலர். மகளிரின் கோதைகளை மைந்தர்கள் அணிந்தவராகிச் சென்றனர். மைந்தரின் தாரினை மகளிர் புனைந்தவராகி வெளியே நடந்தனர். இவ்வாறெல்லாம், தாந்தாம் முந்திச்சென்று நீராட விரும்பியதனால் மயங்கிச், செய்வது என்னவென அறியாமலேயே செய்தவராக, வையையை நோக்கிப் பலரும் திரண்டு செல்வாராயினர்.

பாண்டியனும் புதுவெள்ளமும்

‘போர்க்களத்திலே பாண்டியன் தன் யானைப் படையினை வரிசையாக நிறுத்தி இருக்குமாறுபோல, மேகங்கள் வானத்தே அணியணியாக எழுந்தன. அவனுடைய போர்முரசு ஆரவாரிப்பதுபோல, அம்மேகங்கள் இடித்து முழக்கின. அவன் படையினர் பகைவர்மீது சொரிகின்ற அம்புக் கூட்டங்களைப் போல, மழைத்துளிகளை அம் மேகங்கள் சொரிந்தன. பாண்டியனின் வேலைப்போல, மின்னலும் ஒளிவிட்டது. அவனுடைய வள்ளன்மையைப் போல, மேகங்கள் மழையினைப்