பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

55


பொழிந்தன. பாண்டியனின் படை வெள்ளத்தைப் போல, வையையின் வெள்ளமும் எங்கும் பரந்து விளங்கிற்று. இவ்வாறு, மழையின் சிறப்பினைக் கூறுகிறது ஒரு பரிபாடல்.

திருமருத முன்துறை

வையைத் துறைகளுள், அழகாலும் சிறப்பாலும் மிக்கது இதுவே. நீராட வந்து இதன்கண் திரண்டோர் ஆடவரும் மகளிருமாகப் பலராயினர். அவர்கள் வருகின்ற களிப்பின் பேரளவினைக் கண்டலர்கள், ‘இவர் செய்த தவப்பயன் பெரிது’ என்றனர். ‘மகளிர் வையையினால் அழகு பெற்றனரோ? வையைதான் அவர் வரவினால் அழகு பெற்றதோ?’ இதனை எவராலுமே சொல்லவியலாது என்றனர்.

முழவின் ஒலிக்கு எதிராக இடிமுழக்கம் எழுந்தது. வீணை ஒலிக்க, அதற்கு எதிராக வண்டினங்களின் ஆர்ப்பொலி எழுந்தது. குழலோசைக்கு மாறாகத் தும்பிகள் மலர்த்தாதினை ஊதுகின்ற ஒலி எழுந்தது. காற்றாகிய நட்டுவன், பூங்கொடியாகிய நடனமாதை நடனமாடச் செய்து கொண்டிருந்தான். இவ்வாறாக எழிலுடன் விளங்கிற்று அந்நாளில் திருமருத முன்துறை.

மதுரைக்கு அழகுதருகின்ற வையையின் புதுப்புனல் வருகையோடு, அங்கு வருகின்ற மக்களின் களிப்பு முதலியவற்றையும், மேற்கண்டவாறு உரைக்கிறது பரிபாடல். இஃது அக்கால மதுரையின் செழுமையான மக்கள் வாழ்வியலை நன்கு விளக்குவதாகும்.

மக்களைப்போலவே, பாண்டியனும் மனக்களிப்புடன் கூடியவனாக, வையைப் புதுப்புனலிலே ஆடி மகிழ்கின்ற வழக்கத்தை உடைவனாக இருந்தான். அவன் வந்து நீராடிய அந்தக் காணற்கு அரிய காட்சி, ஆகாய கங்கையிலே இந்திரன் சென்று நீராடியதுபோன்று இருந்ததாம்.

‘இசைக்கு உரிமையுடைய பாணரும் கூத்தரும் ஒருங்கே புகழ்ந்து தொழ, வறுமையுடைய புலவர்களின் கைந்நிறையப் பொன்னைச் சொரிந்து மகிழும் பாண்டியனைப்போல, வையையும் வயலினிடத்தே பொன்மணிகளைப் பரப்பும் தன் செயலினின்று என்றும் நீங்காது இருப்பதாக!’ என வாழ்த்துகிறது ஒரு பரிபாடல். அந்த வாழ்த்து, அன்று மட்டுமன்று என்றென்றைக்குமே உரியதாகும்.