பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

57


மணங்களுடன், தென்றலும் மெல்ல மெல்ல உலவுகின்ற சிறப்பினை யுடையதாம் அவ்வழி.

புகழ்பெற்ற மதுரைக்கும் பரங்குன்றிற்கும் இடையே உள்ள இடம் மிக்க தொலைவானதன்று. எனினும், மகளிரும் மைந்தரும் நெருங்கி விளையாடி வருதலால், கடத்தற்கு மிகவும் தொலைவானதுபோலவே தோன்றுமாம்.

தம் அறிவாலும் வீரத்தாலும் பிறரை வெற்றி கொள்ளும் சிறப்புடையவர் மதுரைப் பேரூரின் மக்கள். அவர்கள், தாம் செய்த அறச்செயல்களின் பயனை நுகர்வதற்குத் தேவலோகம் செல்லுபவரைப் போல, விடியற் காலையிலே பரங்குன்றத்தை நோக்கிச் செல்வார்களாம்.

அணிபல புனைந்தவராயும், நல்லாடை அணிந்தவராயும், நறுமணமாலை சூடியவராயும், தேரும் குதிரையும் ஊர்ந்தும், நடந்தும் அவர்கள் செல்வார்கள். அவர்களுடைய மாலையணிந்த தலைகள் நெருக்கமுற்று விளங்கும் அவ்வழியானது, ஒத்த பூக்களை நிறைய வைத்துக் கட்டி நிலமகட்கிட்ட மாலையினைப் போலத் தோன்றுமாம்.

பாண்டியன் வருதல்

நட்சத்திரங்கள் பலவுஞ் சூழச் சந்திரனனானவன் மேருமலையினை வலம் வருவதுபோலப் பாண்டியன் தன் மனைவியும் சுற்றமும் சூழ வந்து பரங்குன்றினை வலம் வருவான். அவர்களுடைய ஊர்திகள் வழியை அடைத்துவிடும். அதனால், யானைகளை வழியினின்றும் அகற்றிக் கட்டுவார் சிலர்; குதிரைகளை வழியினின்றும் நீக்கி ஒதுக்கி நிறுத்துவார் சிலர்; தேர்களை வழியைவிட்டு ஒதுக்கி நிறுத்துவார் சிலர்; இவ்வாறு எங்கும் நிறுத்தப்பெற்ற இவைகளால், அந்த இடமும் பாண்டியனின் போர்க்களப் பாசறையினைப் போலவே தோற்றுமாம்.

பரங்குன்றின் சிறப்பு

திருப்பரங்குன்றத்தே மழையும் மிகுதியாகப் பெய்யும். அதனாற் சுனைகள் எல்லாம் மலர்ந்த நீர்ப் பூக்களை உடையனவாய் விளங்கும், கடம்புகள் பூத்துக் குலுங்கும். அந்தப் பூக்களை ஊதித் தேனுண்ணும் வண்டினங்களின் செவ்வழிப்பண் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும்.

மலைச் சாரல்களிலே மூங்கில்கள் மிகுதியாக வளர்ந்திருக்கும். அவை, மகளிருடைய தோள்களின் அழகினை