பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

ஒருவர் புகழோடு விளங்க வேண்டுமானால், அந்தப் புகழுக்குரிய தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறே, ஒரு நகரம் புகழோட விளங்கவேண்டுமானாலும், அதற்கேற்ற தகுதிகள் இருக்கவேண்டும் நிலையான பெரும்புகழை இரண்டாயிரம் வருடங்கள் தொடர்ச்சியாகப் பெற்றிருந்ததுடன், இனியும் குன்றாத புகழோடு நிலவும் மதுரைப் பேரூருக்கு அத்தகைய தகுதிகள் ஏராளமாக அமைந்திருக்கின்றன. அவைகளை நினைவிற்குக் கொண்டுவந்து, மதுரையையும் மதுரத்தமிழையும் மதித்துப் போற்றுவதற்கு உதவுவதே இந்தச் சிறு நூலின் நோக்கம்.

தெய்வீக அருளும், செந்தமிழின் வளமும், தென்னவரின் மறமாண்பும், தமிழ்ச்சான்றோரின் சால்பும், மதுரையின் புகழ் மணத்தை உலகெங்கும் என்றும் பரப்பியபடியே இருக்கின்றன. சங்கம் இருந்து தமிழாய்ந்த மதுரையிலே, அண்மையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடும் நடந்து மிகப்பெருமை பெற்றுள்ளது.

மதுரை மாநகரம், செம்மையும் சிறப்பும் கொண்ட தமிழ் மறவர் நாட்டின் கோநகராகவும், தமிழ்மொழியின் நிலைக்களனாகவும், தமிழ் நாகரிகத்தின் வாழிடமாகவும், நல்லறிவின் ஊற்றுக்களனாகவும் விளங்கிய சிறப்பெல்லாம், இந் நூலிலே தொகுத்துக் காட்டப் பெற்றுள்ளன.

தமிழ் மணம் நிரம்பிய இந்நூலைத் தமிழ்ப் பதிப்பகத் துறையிலேயே வியப்புமிகு சாதனைகளைப் புரிந்துள்ள வானதி வெளியிடுவது, தமிழ் வளர்ச்சிக்கு மேலும் வலிமையூட்டும். அவருக்கு என் நன்றி.

தமிழன்பர்கள் விரும்பி வரவேற்பார்கள்.

எல்லாம் தமிழன்னையின் திருவருள்.

அவள் புகழ்சால் பொன்னடிகளில் இப்புகழ்மலரைப் படைத்துப் போற்றுகின்றேன்!

சென்னை

30-1-81

புலியூர்க் கேசிகன்