பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

59



3. திருமாலின் குற்றம்

திருமால்

“நின் வெம்மையும் ஒளியும் கதிரவனிடத்திற் காணப்படுகின்றன. நின் சுரத்தலும் வண்மையும் மாரியிடத்து அமைந்துள்ளன. நின் தாங்கும் திறனும் பொறுமையும் பூமியினிடத்தே பொருந்தியுள்ளன. நின் மணமும் ஒட்பமும் காயாம்பூவிடத்துத் தோன்றுகின்றன. நின் தோற்றமும் பெருமையும் நீரினிடத்தே நிலவுகின்றன. நின் உருவமும் ஒலியும் ஆகாயத்திடத்தே அமைந்திருக்கின்றன. நின் வருகையும் ஒடுக்கமும் வாயுவினிடத்தே வாய்த்துள்ளன. ஆதலின், இவையும் உவையும் அவையும் பிறவும் ஆகியோய்! நின்னிடத்திலிருந்து தோன்றி நின்னாற்காக்கப்பெற்றனவாகிய இவையெல்லாம், பின்னரும், நின்னுடன் பொருந்துவனவே!

“ஆலமரமும், கடப்பமரமும், யாற்றிடைக் குறையும், குன்றும், பிறவுமாகிய இடங்களிற் பொருந்திய பல தெய்வங்களாக வகுத்துச் சொல்லப்படும் பல்வேறு திருநாமங்களையும் உடையவன் நீயே! எங்கும் நிறைந்திருக்கின்றவனே! நின் அன்பர்கள் மனத்திற் கொண்டனவன்றி நினக்கென வேறு திருவுருவம் உடைய அல்லை! நின் அன்பர்கள் தொழுத கைகளின் தாழ்ச்சியிடத்தே அகப்பட்டவனும் நீயே! அவ்வன்பரின் ஏவலாளனும் நீயே! அவரவர் செய்வனவற்றிற்குப் பாதுகாவலனும் நீயே!

“பகைவருயிரை நீக்குதலும், நட்டோரின் உயிரைப் பாதுகாத்தலுமாகிய தொழிலை உடையை நீ அல்லை! ஏனெனில், நினக்குப் பகைவரும் இல்லை. நட்டோரும் இல்லை! உயிர்களது இயல்பால், நினக்குப்பகையும் நட்பும் உளபோலத் தோன்றுதலும் உள; எனினும், நின் இயல்பினால் அவை இருப்பனவல்ல.”

இவ்வாறு, அருமையாகத் திருமாலை வாழ்த்தி வழிபடுகிற மரபினைப் பரிபாடலுள் காணலாம்.

“சுனைகளிலெல்லாம் நீலமலர் மலர்ந்திருக்கும். அச்சுனையைச் சூழவும் அசோக மரங்கள் பூத்திருக்கும். வேங்கை மரங்களும் அங்கே பூத்துக் குலுங்கும். இதனால், இருங்குன்றென்னும் பெயர் எங்கணும் பரவிப் புகழுடையதாகத் திகழ்வது நின் மலை!

“குட்டியால் தழுவப்பட்ட மந்தி பாயவும், முல்லை மலர் கற்பு நிகழ்ச்சியைக் காட்டவும், மயில்கள் அகவவும்,