பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

முத்தமிழ் மதுரை


குருக்கத்தியின் இலை உதிரவும், குயிலினம் கூவவுமாக ஒரே ஆரவாரத்துடன் நின் மலை விளங்கும்.

“திருமாலே! நின் கோயிலிருக்கும் இடத்தில் ஒருசார் மணியின் நிறங்கொண்ட மலை உள்ளது. அம் மலையிலே வேங்கை, மரா, மகிழ், அசோகம் முதலியன ஓங்கி வளர்ந்துள்ளன.

“ஒரு பக்கம் பல மீன்கள் பரந்துள்ள கயம் இருக்கிறது. அது, நட்சத்திரங்களைக் கொண்ட நீலவானம் போல விளங்குகிறது.

“திருமகளும் விரும்பும் வயல்கள் ஒருசார் உள்ளன; அங்கே உழுபவர்களும் நடுபவர்களும் ஆரவாரத்துடன் கூடியிருக்கின்றனர்.

“ஒருசார் நகரம் உள்ளது. அங்கே அந்தணர்கள் உள்ளனர். உண்ணும் பொருள்கள், பூசும் பொருள்கள், பூண்பன, உடுப்பன, மண்ணுவன, மணி, பொன் மலைப் பண்டங்கள், கடற்பண்டங்கள் முதலியவற்றை விற்றற்கு உரிய வணிகரின் வீதியும் அங்கே உள்ளது. மென் புலத்திலும் வண்புலத்திலும் வேளாண்மை செய்யும் களமரும் உழவரும் உள்ள வீதியும் ஒரு பக்கத்தே விளங்கும்.

இவ்வாறாக, மதுரையின் அருகே பாய்ந்தோடும் வையைப் பேரியாற்றின் புதுப்புனல் வரவையும், மதுரையின் அருகே இருந்த திருப்பரங்குன்றின் சிறப்பையும், திருமாலிஞ் சோலைமலையின் செழுமையினையும், பரிபாடல் விரிவாகக் கூறுகின்றது.

இதனால், அன்றைய மதுரையின் செழுமையும் தெய்வபக்தியும், பிறவும் நன்கு புலனாகும். பரிபாடல் பழந்தமிழ் மதுரைப் பேரூரினைப் படம் பிடித்துக் காட்டும் சிறந்த ஒரு பெருநூல் ஆகும். அதனை முற்றவும் கற்றுஅறிந்து இன்புறுதல் வேண்டும்.

14. மதுரைக்காஞ்சியும் மதுரையும்

பழந்தமிழ் இலக்கியச் செல்வமான பத்துப்பாட்டினுள், ஆறாவது பாட்டாக விளங்குவது மதுரைக் காஞ்சியாகும். ‘மாங்குடி மருதனார்’ என்னும் புலவர் பெருமானால் மதுரைப் பெருவேந்தனான பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்குக் காஞ்சித் திணையைக் கூறுமுகத்தான் செய்யப்பட்டது இந்நூல் ஆகும்.