பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

63


அறிவோம். இவ்வாறே, அந்நாளில் பாண்டியனின் வெற்றிக் கொடியாக விளங்கியது கயல் பொறித்த நெடுங் கொடியாகும்.

அரசனுக்கு உரியதான கயற்கொடி அவனுக்குரிய அரண்மனையிலும், கோட்டை வாயில்களிலும் வானளாவப் பறந்துகொண்டிருந்தது. அஃதன்றியும், வேறு சிலவகையாக கொடிகள் பறந்திருந்த காட்சியினையும் மதுரைக் காஞ்சி கூறுகிறது.

விழாக்களைத் தொடங்கி நிகழ்த்தும்போது, அவ்வக் கடவுளர்க்கு உரிய கொடிகளை மக்கள் பறக்கவிட்டனர். பகைவர்மேல் படைகொண்டு சென்று வெற்றி பெறுகின்ற தானைத்தலைவர்கள் தங்கள் வெற்றிக் கொடிகளைப் பறக்க விட்டனர். மதுக்கடைகளை அறிவிக்கவும் ஒருபுறத்தே கொடி பறந்து கொண்டிருந்தது. மற்றும் பல்வேறு கொடிகளும் மதுரை நகரிலே அந்நாளிற் பறந்து கொண்டிருந்தன.

வழிபாட்டு இடங்கள்

சிவபெருமானுக்கும், மற்றும் பல கடவுளர்களுக்கும் தனித்தனிக் கோயில்கள் அந்நாளைய மதுரையிலே இருந்தன. மக்கள் அவ்விடங்களிலெல்லாம் சென்று, தத்தம் விருப்பம்போன்று வழிபாட்டினை நிகழ்த்தி வந்தனர். சில தெய்வங்கட்கு உயிர்ப்பலியினைத் தருகின்ற ஒரு வழக்கமும் அந்நாளிலே இருந்தது.

சான்றோர் பள்ளிகள்

அந்நாளைய மதுரைப் பேரூரிலே சமணர்கள் வாழ்ந்திருந்த செய்தியினை முன்னரே அறிந்தோம். அவர்கட்கு உரியதான பள்ளிகளும் மதுரையில் இருந்தன. அங்கே சமணச்சான்றோர்கள் வீற்றிருந்து, மக்களுக்கு அறவுரைகளை எடுத்துச்சொல்லிவந்தனர்.

சமணத் துறவிகள் வாழ்ந்த அறப்பள்ளிகளைப் போலவே, பெளத்தத் துறவிகள் வாழ்ந்திருந்து அறநெறியும் கல்வியறிவும் அறிவுறுத்திய பெளத்தப் பள்ளிகளும் மதுரை நகரிலே இருந்தன.

இவையன்றியும், மக்களிடத்தே அருள்கொண்டு தொண்டாற்றிவந்த அருளுடைச் சான்றோரான, அந்தணர் பலரும் இருந்து பணிநிகழ்த்திய பள்ளிகளும் மதுரையில் இருந்தன.