பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

முத்தமிழ் மதுரை



அறங்கூறும் அவையம்

இன்று, நம் நாட்டின்கண் பல்வேறு வகையான நீதி மன்றங்கள் விளங்கக் காணுகின்றோம். இவ்வாறே, பழைய நாளைய மதுரையின் கண்ணும், அறங்கூறும் அவையங்கள் அறநெறியினைப் பேணிவந்த சிறப்பினை மதுரைக் காஞ்சி.

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
செற்றமும் உவகையும் செய்யாத காத்து
ஞெமன்கோல் அன்ன செம்மைத் தாகிச்
சிறந்த கொள்கை அறங்கூறு அவையமும்

(489–492)

என்று கூறுகின்றது.

அறத்தைச் சொல்லும் முறையிலே அவர்கள் அஞ்சாமை உடையவராக இருந்தனர். அவலமும் ஆர்வமும் நீக்கிய உள்ளத்தினராகவும் அவர்கள் விளங்கினர். சினமும் மகிழ்வும் என்றில்லாது, உள்ளத்தை நடுவுநிலையோடு பேணியவராகத் துலாக்கோல் போன்ற செம்மையினைப் பூண்டவராகச் சிறந்த கொள்கையுடன் அச்சான்றோர்கள் நீதி வழங்கினார்கள்.

வாணிகர்கள்

வாணிகம் என்ற சொல்லோடு, இன்று ஒரு புதிய செய்தியும் கூறப்பட்டு வருகின்றது. அறநெறிக்கு மாறாக நடந்தேனும் பெரும்பொருள் ஈட்டுபவர் பெரிய வாணிகர்கள் என்ற இந்நாளில் பேசப் பெறுகின்றனர். அந்நாளைய மதுரை வணிகரோ இத்தன்மையர் அல்லர். அவர்கள் அறவழி பிழையாதவர்; முறைமையோடு நடந்து வந்தவர். அவருடைய மாளிகைகள் குன்றுகளைப் போன்றவாகச் சிறப்புடன் விளங்கின. பல்வகையான பண்டங்களோடு உணவுப்பொருட்களும் ஏராளமாகக் குவியல் குவியலாக மலைபோற் குவிந்து அங்கே கிடந்தன. மலை நாட்டுப் பொருள்களும், நிலத்தே விளைந்தனவும், கடல்படு பொருள்களும், மற்றும் பல்வேறான பொருள்களும் விளங்க, வாணிகம் முறைதவறாமல் நிகழ்ந்து வந்தது. பொருள்களுக்கு விலையாகத் தரப்படுவன பொன்னும் முத்துமாக இருந்தன.

தொழிலாளர்கள்

வாணிகர்களைப் போலவே, பல்வேறான கைத் தொழில் வல்லுநரும் மதுரை நகரிலே அந்நாளில் சிறப்புடன் விளங்கினார்கள்.