பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

65



இரத்தினங்களைத் துளையிட்டு அவைகளைக் கோத்துப் பல்வேறான அணிவகைகளாகச் செய்வோர்; பொன்னைப் புடமிட்டு ஒளிர்கின்ற பல்வேறு அணிகலன்களைச் செய்பவர்கள்; பொன்னை உரைத்துக் காண்பவர்கள்; ஆடைகளை விலைகூறி விற்கும் வணிகர்கள்; செம்பினை நிறுத்து விலைக்குக் கொள்பவர்கள்; புதுமையான சித்திர வேலைப்பாடுகளைத் துணிகளிலே செய்து தருபவர்கள்; பூவும் புகையும் ஆய்ந்து விலைப்படுத்துவோர்கள்; கண்டதைக் கண்டவாறே தீட்டிக் காட்டும் ஓவியக் காரர்கள்; இவ்வாறான பற்பலரும் திரள்திரளாகச் செறிந்திருந்ததும் அந்நாளைய மதுரைப்பேரூர் ஆகும்.

இவ்வாறு, வளத்தால் பெரிதும் பொலிவுற்று விளங்கிய மதுரைப் பேரூரின்கண், அந்நாளிலே மக்களும், மன்னரும், படைஞரும், வணிகரும், மற்றும் பல்லோரும் இன்ப நல்வாழ்வினராக ஏற்றமுடன் திகழ்ந்தனர் என்று நாம் அறிதல் வேண்டும்.

மதுரைக் காஞ்சியின்கண் நாம் காணும் மதுரைப் பேரூரினைப் பற்றிய செய்திகளுள் இவை சிலவாகும். அந்நூலினை ஆழ்ந்து கற்று அதனிடத்துக் கூறப்பெறும் பலவற்றையும் நாம் அறிந்து கொள்ளல் மேலும் பயன் தருவதாகும்.

15. பாண்டியப் பேரரசர்கள்

பாண்டியரின் கோநகராக விளங்கிய மதுரை மூதூரினைப் பற்றி இதுவரை கண்டோம். இந்தப் பெருமைகளுட் பலவும் மதுரையின் கண்ணிருந்து அறம் பிறழாது ஆட்சிநடாத்திய பேரரசர்களின் ஆட்சிச் சிறப்பினாலேதான் அன்று உருவாயின. ஆதலின், அவருட் சிறப்பான சிலரைப் பற்றியும் இப்பகுதியில் தெரிந்து கொள்வோம்.

பாண்டியன் அறிவுடை நம்பி

இவன், தன் பெயரினுக்கு இணங்க அறிவு மேம்பாட்டிற் சிறந்தவனாக விளங்கியவன். தமிழ்ப் புலமையில் தலைசிறந்தவனாகவும் இவன் விளங்கினான். புதல்வர்களால் உண்டாகும் ஒப்பற்ற இன்பத்தைப்பற்றி இவன் கூறும் கருத்துக்கள் மிகவும் அருமையுடையவாகும். “மக்கட் செல்வம் இல்லாதவர்கட்குத் தாம் உயிர் வாழ்ந்ததன் பயனென்பதே இல்லை” என்று இவன் கூறியுள்ளான். இவனைப் பாடியவர், நட்பிற்கு இலக்கணமாகச் சான்றோராற் போற்றப் பெறுபவரான பிசிராந்தையார் ஆவர்.