பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

முத்தமிழ் மதுரை



ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

இவன், தன் ஆட்சிக்காலத்தில் வெற்றிப் பெருமிதத்தினாலே புகழ்பெற்றுத் திகழ்ந்த பேரரசன் ஆவான். தமிழகத்துப் படையெடுத்து வந்த வடவாரியப் படையினரை வென்று வாகை சூடியவனும் இவன். இலங்கைக் கயவாகுவும், இவனும், கரிகாற்சோழனும் ஒரேகாலத்தில் இருந்தவர்கள் ஆவர். இவன் பாடிய செய்யுள் ஒன்றும் புறநானூற்றில் உள்ளது.

இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்

இவன், அந்நாளைய சேரசோழரினும் சிறப்புடைய பெருமன்னனாகத் திகழ்ந்தவன். காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், ஆவூர் மூலங்கிழார், வடமவண்ணக் கண் பேரிசாத்தனார், மருதனிள நாகனார், நக்கீரனார் ஆகிய புலவர் பெருமக்களால் பாடப்பெற்ற சிறப்பினன்.

கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி

இவன், இன்று காளையார் கோயில் என வழங்கும் கானப்பேரெயில் என்னும் இடத்தில் நிகழ்ந்த போரிலே வெற்றிபெற்ற புகழினை உடையவன். ஐயூர் மூலங்கிழார், ஒளவையார், கடுவன் இளமள்ளனார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.

பாண்டியன் முடத்திருமாறன்

சங்ககாலத்திலே, இடைச்சங்கத்தின் இறுதியிலே, கபாடபுரத்திலிருந்து அரசியற்றியவன் இவன். இவன் காலத்தேதான் பாண்டிய நாட்டின் பெரும்பகுதியும் கடலாற் கொள்ளப்பட்டதாகி மறைந்தது. இவனே நாம்கண்ட, புகழாற் பொலிவுற்ற மதுரைப் பேரூரினை அமைத்தவன் என்று அறிஞர்கள் உரைப்பார்கள். கடைச் சங்கத்தை நிறுவியவனும் இவனே யாவன். தமிழ் நலம் பேணியது மட்டுமன்றித் தானே தமிழ் உணர்ந்த புலவனாகவும் விளங்கியவன் இவன்.

பாண்டியன் மதிவாணன்

இவன், கடைச்சங்கத்தினைப் புரந்துவந்த பாண்டியர்களுள் ஒருவனாவான். தமிழ்ச் செய்யுள் இயற்றும் ஆற்றலையும் இவன் பெற்றிருந்தான். நாடகத்தமிழ்நூல் ஒன்றனை இயற்றி, அதனைச் சங்கத்தே அரங்கேற்றியும் சிறப்புற்றான். ‘மதிவாணர் நாடகத் தமிழ் நூல்’ என்னும் பெயருடன் வழங்கிவந்த அந்நூல், இந்நாளிற் கிடைக்கப் பெறவில்லை.