பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

முத்தமிழ் மதுரை


யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை வென்று வாகை சூடியவன். மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை என்னும் ஒப்பற்ற பாட்டுக்கள் இவனைக் குறித்து எழுந்தனவே. இவனுடைய சிறப்பினை அவனை விதந்து போற்றுகின்றன.

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

இவன் பகைவரை அறப்போராற்றி வெற்றிகொண்டு விளங்கிய ஆற்றல் கொண்டவனாவான். காரிகிழார், நெடும்பல்லியத்தினார், நெட்டிமையார் ஆகிய சான்றோர்களாற் பாடப்பெற்றவனும் இவன் ஆவான்.

வெள்ளியம்பலத்துத் துஞ்சிய மாறன்வழுதி

இவன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருமாவளவனுடைய நண்பனாகத் திகழ்ந்தவன். காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும் புலவர் இவனைப் போற்றியுள்ளனர்.

நம்பி நெடுஞ்செழியன்

இவனும் ஆற்றலுடைய பேரரசனே யாவான். இவனுடைய சிறப்புக்களைப் பாடியவர், பேரெயின் முறுவலார் என்னும் புலவர் பெருமான் ஆவார்.

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்

‘முந்நீர் விழவின் நெடியோன்’ எனவும் இவனைக் குறிப்பார்கள். நெட்டிமையார், மாங்குடி மருதனார் ஆகியோராற் பாடப்பெற்றவன் இவன்.

புலவராயிருந்த பாண்டியர்கள்

மேலே குறித்த பாண்டியப் பேரரசர்கள் அல்லாமல், பல்புகழ்கொண்டு வாழ்ந்திருந்த பாண்டியரும் பலராவர். பொற்கைப்பாண்டியன், பூதப்பாண்டியன், பசும்பூண் பாண்டியன் என்னும் இவர்களும் சிறப்புடன் விளங்கியவர்களே யாவர். இப்பாண்டியப் பெருமன்னர்களுள் புலமையாற் சிறப்புற்றுத் தமிழ்ச் செய்யுள் செய்து சிறந்தவர்கள் சிலர். அவர்கள், பாண்டியன் அறிவுடை நம்பி, இளம்பெரு வழுதி, உக்கிரப் பெருவழுதி, ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், நல்வழுதியார், ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன், ஏனாதி நெடுங்கண்ணன், தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், பாண்டியன் பன்னாடு தந்தான், பாண்டியன்