பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

69


மாறன்வழுதி, முடத்திரு மாறன் ஆகியோராவர். இவரன்றிப் பூதப்பாண்டியன் தேவியின் பாடலொன்றும் சங்கத் தொகை நூல்களுள் காணப்பெறும்.

இவ்வாறு, தமிழ் அறிந்த பெருமன்னராகவும், தறுகண்மை கொண்ட சிறப்பினராகவும், தம்புகழ் நிறுவிச் சென்ற பாண்டியர்களின் புகழ்பெற்ற கோநகராக விளங்கியதும், அந்நாளைய மதுரைப் பேரூர் ஆகும்.

16. முத்தமிழ் மதுரை

சங்க கால மதுரைபற்றி, இலக்கியங்களாலும், பிற வழிகளாலும் அறியப்படும் செய்திகளை எல்லாம், இதுவரை மிகச்சுருக்கமாக உரைத்தோம். இவை கடைச்சங்க காலத்து மதுரை பற்றிய செய்திகள் மட்டுமே.

முதற்சங்கம் இருந்த மதுரையோ குமரிக் கண்டத்தில் இருந்தது. அது கடல்கோளால் மறைந்தது. அதுபற்றிய பிற செய்திகள் யாதும் இன்றுவரை தெரியவில்லை.

‘கடைச்சங்க காலம்’ என்பது, இற்றைக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலம். அந்தக் காலத்து மதுரை நகரும், மதுரைவாழ் மக்களும், மதுரையிலே புகழுச்சியில் சீர்பெற்றிருந்த மதுரத் தமிழும், நம் நினைவில் நிலைத்துநின்று, என்றும் பசுமையூட்ட வேண்டும். அந்த மதுரையார் வாழ்வும், மதுரை மன்னர்களின் ஆட்சியும், மதுரைப் புலவர்களின் செறிவும், மறக்கவே முடியாதன. ‘மீண்டும் அடையமுடியுமா?’ என்னும் ஏக்க நினை வோட்டத்தில், நம்மை ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபடுத்துவன அவை. அவற்றுள், நம் நினைவில் வைக்கவேண்டிய சில செய்திகள் மட்டும் இங்கே, இந்தப் பகுதியில் நாம் நினைவுகூர்வோம்.

தமிழாய்ந்த பேரவை

மொழியை, எண்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு கருவி மட்டுமே யென்று சிலர் இந்நாளிற் சொல்வார்கள். ‘மொழியே மக்கள் வாழ்வின் உயிர்நாடி’ என்று போற்றியவர்கள் பழைய காலத்து மன்னரும் சான்றோரும். ஆகவேதான், புலவர்களின் செய்யுட்களைத் தொகுத்து ஆராய்ந்து, செம்மையுடன் பேணிக்காக்கும் நெறியைக் கண்டனர். இவ்வாறு கண்ட அமைப்புத்தான் ‘தமிழ்ச்சங்கம்’ இதை நாம் மறந்துவிடக்