பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

முத்தமிழ் மதுரை


கூடாது.

சங்கத்தார் தொகுத்துத் தந்துள்ள தொகைகளின் வளமையும், சால்பும், நயமும் அன்றைய மொழிவளர்ச்சியின் சிறப்பைக் காட்டும். அத்துடன், தமிழ் இலக்கியத்தினைப் பேணிக்காப்பதில், செம்மையை நிலைப்படுத்துவதில், தழிழறிஞர்களுக்கு இருந்துவந்த மனஉறுதியையும், ஆர்வத்தையும் தெளிவையும் காட்டும்.

பாண்டியர் கோநகரில், பாண்டியர் ஆதரவில் இயங்கிய தமிழ்ச் சங்கம், பாண்டியர் புகழ்பாடும் செய்யுட்களை மட்டுமே தேடித் தொகுக்கவில்லை. சேரர் புகழும், சோழர் புகழும், மற்றும் பலர் புகழும் பாடியுள்ள பல செய்யுட்களையும் ஒருங்கே தேடித் தொகுத்துள்ளனர். இது, அவர்களின் நடுநிலையுள்ளத்தையும், தமிழ் வளத்தை அல்லாமல், பிற அரசியல் சார்புகளைப்பற்றிக் கருதாத தாய்மொழிப்பற்றின் தூய்மையையும் காட்டுவதாகும்.

பாண்டியர் சங்கத்தைப் புரந்தாலும், பாண்டிய மன்னர்களே பெரும் புலவர்களாக இருந்தாலும், அவர்கள் தமிழையும், தமிழறிந்த சான்றோரையும் பெரிதும் மதித்துப் போற்றினார்களேயல்லாமல், அவர்கள் பணிகளில் குறுக்கிடவில்லை. தம்முடைய எண்ணங்களை அவர்கள் பாற் சுமத்த முனையவில்லை. தமக்கு வேண்டியவர்கள் செய்யுட்களைச் சங்கம் ஏற்கவேண்டும் என்று வலியுறுத்தவும் இல்லை. “மொழியின் சீர்மை” என்பது, ‘தன்னலங் கடந்த பொதுமை உணர்வு’ என்ற உறுதியோடு, அந்தச் செவ்வியையே பாண்டியர்கள் பேணிவந்தனர்.

தமிழறிந்த சான்றோர்க்குப் பாண்டியரும், அக்காலத்துப் பிற அரசத்தலைவர்களும் மனங்கலந்து அளித்த அந்தப் பெரிய உரிமைதான், அவர்களைத் ‘தமிழ்நலம்’ ஒன்றே கருதச் செய்து, என்றும் நிலைக்கும் இலக்கிய மணிகளை, காலத்தை வெல்லும் கருத்துச் செல்வங்களை, ஆராய்ந்து தொகுத்துத் தருகின்றதற்கு உதவியது.

இந்த உரிமையிலே, அரசுத் தலையீட்டை அவர்கள் சந்திக்க வேண்டியதே ஏற்படவில்லை. தெய்வத்தலையீட்டையும் அவர்கள் ஏற்கவில்லை என்பதற்கு, ‘கொங்கு தேர் வாழ்க்கை’ என்னும் செய்யுளும், அதுபற்றிய வாதங்களும் சிறந்த சான்றாகும். நக்கீரனார் தம் கருத்தை அழுத்தமாக வலியுறுத்திய துணிவு தமிழ்பேணும் துறையிலே பொறுப்பிலிருப்பவர்களிடம் என்றும் நிலவ வேண்டிய துணிவும் கடமையுணர்வும் ஆகும்.